சேலம் நவம்பர் 24 – இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் விதமாக ஓர் தற்போது பொறுப்பில் உள்ள திமுக வின் சேலம் மாவட்டம் மல்லூர் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன் என்பவர் கட்சி அலுவலகம் நடத்திக் கொள்ள 2003 இல் இருந்து இடத்தின் உரிமையாளர் கதிர்வேல் (வயது 81) என்பவரிடம் உள்ள கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கட்சியின் அப்பகுதி கிளை அலுவலகமாக இருந்து வந்துள்ளார். கடையின் உரிமையாளர் கதிர்வேல் தனது வயது முதிர்வு காரணமாக தனது மகளை தன்னுடன் துணையாக இறுத்திக் கொள்ள வேண்டி மேலும் அவரது வருமானத்திற்கு வழி செய்யும் விதமாக சிறிய கடை ஒன்றை நடத்திக் கொள்ள முடிவு செய்து சுமார் 7 மாதங்கள் முன்னரே சுரேந்திரனிடம் தனது கடையை காலி செய்து தரும்படி கூறியுள்ளார்.

படத்தில் இருப்பவர் பாதிக்கப்பட்ட கதிர்வேல்

ஆனால், சுரேந்திரன் இது நாள் வரை வாடகையும் தராமல் கடையை காலி செய்யாமல் தட்டிக்கழித்து பின்னர் கடையின் உரிமையாளரிடம் நான் காலி செய்ய மாட்டேன் வேண்டுமானால் நீங்கள் காலி செய்துகொண்டு வேறு பார்த்துச் செல்லுங்கள் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்றால் கூட தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் குடும்பத்தோடு கொளுத்தி விடுவோம் என்றும் மல்லூர் பேரூர் திமுக செயலாளர் சுரேந்திரன் மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட கதிர்வேல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கதிர்வேல் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கதிர்வேல், ” எனது இடத்தை தொடர்ந்து காலிசெய்ய கூறி வருவதோடு, சுரேந்திரன் எங்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார். எனக்கு சொந்தமான இடத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து, எனது கையெழுத்தை அவரே போட்டு கிரயம் செய்து விடுவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்றால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்னை குடும்பத்துடன் கொளுத்தி விடுவேன் என மிரட்டுவதாகவும்” கண்ணீர்மல்க தெரிவித்தார். மேலும் கடையின் உரிமையாளர் ஆன கதிர்வேல் 1971 முதல் 1976 வரை மல்லூர் நகர துணை செயலாளராக தி.மு.க வில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.