தாம்பரம், ஆகஸ்ட் 16, 2022

நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை அடைந்த 75 ஆவது ஆண்டில் கொண்டாட்டத்தில் இருக்கும் இவ்வேளையில் வளர வேண்டிய இளம் தலைமுறை ஒன்று அலட்சியப் போக்கு கொண்டிருக்கும் உள்ளூர் நிர்வாகம் மூலம் ஓர் விபத்தின் காரணமாக உயிரை இழந்து உள்ளார், தாம்பரம் குரோம்பேட்டை அருகே அஸ்தினாபுரம் எனுமிடத்தில் வசித்து வந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியான லட்சுமி பிரியா, பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அதே திசையில் வந்து கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்றினால் இடிக்கப்பட்டு கீழே விழுந்து பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில பலியானார். இது கண் மூடித் திறக்கும் முன்னரே சில நொடிகளில் நடந்து முடிந்து விட்டது. இக்கொடூர சம்பவம் நடந்ததற்கு காரணம் அச்சாலையின் இருபுறமும் உள்ள வணிக கடைகள் மற்றும் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதும் ஆகும்.

செயல்படாத மாநகராட்சி : சாலை ஓரங்களில் பல ஆக்கிரமிப்புகள் பன்னெடுங்காலமாக செய்யபட்டு வருகிறது, இதனை சீர் செய்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் மக்கள் பாதுகாப்பாக கடக்கவும் வாகனங்களில் கடந்து செல்ல ஏதுவாக இருக்கும் எனவும் பல முறை மக்கள் நீதி மய்யம் சார்பாக மாநில இணைச் செயலாளர் (தகவல் & தொழில்நுட்பம் பிரிவு) திரு தினேஷ் பாஸ்கர் அவர்களின் புகார்கள் பல முறை எழுத்துமூலமாக தெரிவிக்கப்பட்டும் மற்ற அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தும் இப்படி பலவகைகளில் தொடர் முயற்சிகள் செய்தும் அதனை கண்டுகொள்ளாத தாம்பரம் மாநகராட்சியின் அலட்சிய போக்கினால் இன்றைக்கு ஓர் உயிரைப் பலி கொடுக்கவேண்டியதாகிப் போனது.

நடந்தது குறித்து அப்பகுதிக்கு நேரிடையாக சென்று பார்த்த தினேஷ் பாஸ்கர் அவர்கள் தனது கருத்துகளை முன் வைக்கிறார் :

உயிர்பலி வாங்கும் மாநகராட்சி : ஆக்கிரமிப்புகளுக்கு துணைபோகும் மாநகராட்சி 
நீயா நானா போட்டிபோடும் துறைகள் /அதிகாரிகளின் அலட்சியம்தான் இந்த உயிர்பலி.
கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் – தினேஷ் பாஸ்கர்

இது உள்ளாட்சி நிர்வாகம் எனப்படும் கார்பொரேஷன் அமைப்பா அல்லது எதையும் கண்டு கொள்ளாத கரப்ஷன் அதிகாரிகள்/ஊழியர்கள் கொண்ட அமைப்பா ? என கேட்க வைக்கிறது. நடந்தும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் என பெரும் சிரமத்துடனும் இச்சாலையை கடக்கவேண்டி உள்ளது மேலும் குறுகிய சாலை பல நேரங்களில் வாகனங்கள் நகர வழியில்லாமல் ஸ்தம்பித்து நின்றுவிடும் (டிராபிக் ஜாம்) இடையூறுகளும் நேர்கிறது. இவை எதையும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவைத்திருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் இப்படியே இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்கக் காத்திருக்கிறது ஆக்கிரமிப்புகள் ?

உயிரிழந்த மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு சொல்லொணாத் துயரில் உள்ள மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார் திரு தினேஷ் பாஸ்கர் (ம.நீ.ம மாநில இணைச் செயலாளர்) அவர்கள்.