டிசம்பர் 11, 2024
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் இன்று. உலகமெங்கும் பெரும்புகழ் பெற்றவர் நமது தமிழ்நாடு மற்றும் தமிழின் அடையாளம் என பெருமிதம் கொள்ள சொல்லலாம். ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலங்களில் நமது மக்களிடையே தமது அரும்பெரும் சிந்தனைகளை கவிதைகளாக பாடல்களாக எழுதி வெளியிட்டு சுதந்திரப் போராட்ட தீயை கனன்று கொண்டிருக்கச் செய்தார். பரங்கியரின் அச்சத்திற்கு பாரதியாரும் ஓர் காரணம். தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளை பெரும் சவாலுக்கு இடையே நடத்தினார். வெள்ளையர்களின் தேடுதல் வேட்டைக்கு ஈடு கொடுத்து சில காலங்கள் மறைந்து வாழ்ந்தார். சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக நின்றதோடல்லாமல் தீண்டாமையை முழு மனதுடன் எதிர்த்து நின்றார். பெண்களின் வாழ்க்கை மேம்பட வேண்டுமெனில் அவர்கள் கல்வியை கற்று உயர வேண்டுமென விரும்பினார். அவரது கவிதைகள் மற்றும் பாடல்கள் யாவும் அவரது மறைவிற்கு பிறகு அரசுடமையாக்கபட்டது.
சம உரிமை, சாதி மத துவேஷம் கொள்ளாமை, நீதியும் நியாயமும் இரண்டு கண்கள் என்பதும், சாதிகளில் உயர்வும் இல்லை அதில் தாழ்வும் இல்லை என திண்ணமாக நம்பினார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள். அதோடு நில்லாமல் தான் நடிக்கும் காலம் தொட்டே தனது படங்களில் இடம்பெறும் வசனங்களை மிகச் சிறப்பாக அமையும்படி பார்த்துக் கொண்டார். அதன்படியே நடந்தும் வருகிறார். பிறப்பால் அமையபெற்ற சாதியை உயர்த்திப் பிடிக்கும் வார்த்தைகளை கருத்துகளை அவர் எங்கும் சொல்லிக் கொள்ளவில்லை. வர்ணமும் பிரிவினையும் பெரும் நோய்கள் என திடமாக நம்புபவர். மகாகவி பாரதியாரின் நூல்களை தொடர்ந்து படித்து தன் மனதில் இறுத்திக் கொண்டார் எனலாம். பாரதியாரின் வசன நடை கவிதையை பல படங்களில் பாடி பதிவிட்டுள்ளார். மானசீகமாக பாரதியாரின் தீவிர சீடராகவும் தன்னை வரித்துக் கொண்டார் என்றும் சொல்லலாம். அவரது பிறந்த நாளான இன்று தன்னெழுச்சி மிக்க அழகிய சொற்களைக் கொண்டு அழகிய தமிழில் புகழ் மாலை ஒன்றை ஆதர்ச முண்டாசு கவிக்கு சூடியுள்ளார்.
“முன்னைப் பழைமையும் பின்னை நவீனத்துவமும் கைகோத்த விந்தைக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதி. என்றைக்குமான சிந்தனைகளை நமக்குத் தந்துவிட்டுப் போன பெருங்கவிஞரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களைச் சிந்தித்து வாழ்த்துவோம். ஓய்தல் ஒழி குன்றென நிமிர்ந்து நில் சிதையா நெஞ்சு கொள் தீயோர்க்கு அஞ்சேல் புதியன விரும்பு” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்