ஆகஸ்ட் : 16, 2௦23
சாதிகள் பார்ப்பது வேண்டாம் என பல ஆண்டுகளாக கூக்குரலிட்டும் இன்னமும் சாதி வெறியும் மத வெறியும் அடங்கவில்லை என்பதாகவே உணர்த்துகிறது இந்த வன்முறை சம்பவம். இன்னும் சொல்லப்போனால் மாணவர்களே அரிவாள்களை கையில் எடுத்துக் கொண்டு இப்படி கண்மூடித்தனமான வன்முறையை தம் வயதையொத்த சக மாணவனை மற்றும் அவரது தங்கையை கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். இதற்காக யார் எந்த சமூகம் பொறுபேற்றுக் கொள்ளப்போகிறது ?
கைகளில் கட்டுகட்டாய் பள்ளி பாடப்புத்தகங்கள் அடங்கிய பையை சுமக்க தோள்களும் கைகளும் கூர் தீட்டப்பட்ட அரிவாள்களை சர்வசாதாரணமாகக் சுழற்றிக் இரண்டு உயிர்களுக்கு பாதகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
கல்வி கற்பதில் போட்டியும் இருக்கலாம் ஆனால் நான் இன்னார் நீ இன்னார் என துவேஷம் கொள்வதோ சாதி மத அடிப்படையில் இரு சாராராக பிரிந்து நிற்பதோ அறவே கூடாது என்பதும் எல்லோரும் சமம் என நினைப்பது மட்டுமே ஒரே தீர்வு. இதில் முக்கிய பங்கு வகிப்பது அல்லது வகிக்கபட வேண்டியது பெற்றோர்களை முதன்மையாக கொள்ள வேண்டும். அதன்பிறகு பள்ளிக்கூடங்கள், ஆசிரியர்கள் கல்வியின் வாயிலாக சாதி களைதல் எவ்வளவு முக்கியம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்திட வேண்டும். எல்லோரும் சமம் என்பதற்கு சான்றே பள்ளிச் சீருடை தான். நர்சரி வகுப்பில் தொடங்கி மேல்நிலை கல்வி வாயிலாகவும் கற்ப்பித்தல் மிகவும் முக்கியம். எழுதி வைத்ததை மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல் சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றை கையிலும் மனதிலும் எடுங்கள் மாணவர்களே ;
ஏனெனில் அரிவாள்களை விட பேனா முனைகள் கூரானவை ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படும்போதெல்லாம் அந்தத் தடுப்புக் கயிறுகளை குத்திக் கிழிக்கும் வல்லமை கொண்டது.