செப்டம்பர் : ௦2, 2௦23
தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து இரண்டு வித்தியாச வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் எனும் திரைப்படத்தில் (ஒன்று சாதாரண உடல்வாகுடைய ராஜா எனும் நபராகவும் மற்றும் உயரம் குறைவான அப்பு எனும் நபராகவும் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு பேருக்கும் தந்தையாக ஒரு சில நிமிடங்கள் தோன்றி வில்லன்களால் கொல்லப்படும் காவல் அதிகாரியாக மூன்றாவது வேடமும் தரித்திருந்தார்).
இத்திரைப்படத்தில் நடக்கும் கொலைகளை ஆய்வு செய்யும் காவல்துறை இன்ஸ்பெக்டர் மற்றும் அவருக்கு துணை அதிகாரியாக வரும் வேடத்தில் திரு.ஆர் எஸ்.சிவாஜி அவர்கள் நடித்திருந்தார். அதில் குறிப்பிடத்தக்கது தனது உயரதிகாரியிடம் “சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க” என்பார் அது மிகவும் புகழ் பெற்ற வசனம் அது குறிப்பிடத்தக்க வகையில் இன்றும் மீம் வழியாகவும் பேசப்படுகிறது.
அதன்பிறகும் பல வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இடையில் அவருக்கு உடல்நிலை சுகமில்லாமல் போகவே இதய அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இது குறித்து அறிந்து கொண்ட திரு கமல்ஹாசன் அவர்கள் தனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலமாக சிவாஜி அவர்களின் அறுவைசிகிச்சை மருத்துவ செலவுகள் முழுவதையும் செலுத்தச் செய்தார் என்பதும் கொரொனோ காலங்களில் பொருளாதார ரீதியாக சற்று தடுமாற்றம் அடைந்தபோது மாதா மாதம் மருந்து மாத்திரைகள் உண்டான செலவுகளை ஏற்றுக் கொண்ட ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிவாஜி அவர்களை தமது குடும்பத்தில் ஓர் அங்கமாக கருதியது என்பதும் அதனை நிறுவிய உரிமையாளரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது உடன்பிறந்த சகோதரனாக பாவித்து வந்தார்.
இத்தகைய நல்ல மனிதரான திரு ஆர் எஸ் சிவாஜி திடீரென இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்பது குறித்து அறிந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் மீளாத்துயாரின் காரணமாக தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கற்செய்தியில் சிவாஜி அவர்களுடனான தனது நட்பை அவரது இழப்பை மிகுந்த வலியுடன் உணர்வதாக தெரிவித்துள்ளார்.
“எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” – திரு.கமல்ஹாசன்