ஜூலை 30, 2024
தற்போது பெய்த கனமழையின் காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியும் தமிழகத்தின் வால்பாறை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பொதுமக்களிடையே மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி பொதுமக்கள் பலரும் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். மழை பாதிப்புகளால் சேதமடையும் கேரள மாநிலம் இதுவரை கண்டிராத பேரழிவு என மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்கள் பெரும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். ஏராளமான பொருட்சேதங்கள் மற்றும் உயிர்ச்சேதங்கள் என வயநாடு நிலச்சரிவால் கலங்கி நிற்கிறது கேரளம். புதையுண்ட உடல்களை தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது மேலும் சிக்கியிருக்கும் உடல்களை தேட மோப்ப நாய்களையும் மீட்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த 48 மணிநேரத்தில் சுமார் 57 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதுவரை நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மாநில நிர்வாகத்தின் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உட்பட இராணுவ குழுக்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடங்கி இரண்டு மாதங்கள் ஆனாலும் இதுவரை கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் தான் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்துகொண்டிருந்த மழை வலுத்து கனமழையாக பொழியத் துவங்கியது. இதனால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்ததும் அதன் தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டதுடன் அதன் தாக்கம் குறித்தும அதன் தாக்கம் குறித்தும் அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்ததுடன், மீட்பு குழுவினரின் போற்றுதலுக்குரிய செயல்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நடந்து வரும் மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் இன்னும் துரிதப்படுத்த வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
“கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம். ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
#Wayanad