ஆகஸ்ட் 16, 2024

அன்னதானம், இரத்ததானம், உடலுறுப்பு தானம் என நாற்பதாண்டு கால நற்பணி இடையறாமல் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மக்களுக்கான சேவைகள் தொடர்ச்சியாக செய்துவந்ததன் மூலம் நேரடி அரசியலில் நுழைந்தார் திரு.கமல்ஹாசன் அவர்கள். “மக்கள் நீதி மய்யம்” எனும் கட்சி உதயமாகி ஏழு ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இரத்ததானம் தருவதை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவருக்கும் குருதி சுலபமாக கிடக்க வேண்டி “கமல் ப்ளட் கம்மியூன்” (Kamal Blood Commune) எனும் அமைப்பையும் கட்சியின் இன்னொரு அங்கமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

இன்னும் கூடுதல் சிறப்பாக கடந்த ஆண்டில் “கமல் பண்பாட்டு மையம்” எனும் அமைப்பை நிறுவி அதன் மூலமாக கிராமிய இசை மற்றும் இன்னபிற பழமையான வாத்தியக் கருவிகள் கொண்டு இசைத்தல் என பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் அவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இலக்கியச் சேவையில் தமது கவனத்தை செலுத்தியுள்ள “கமல் பண்பாட்டு மையம்” அதற்கான முன்னெடுப்பில் முதன் முறையாக மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம் ஒன்றினை புகழ் பெற்ற மொழிபெயர்ப்பு வல்லுநர் தலைமையில் அடுத்த மாதம் நடத்திட வேண்டி அதற்கான பணிகளைத் துவக்கியுள்ளது. தமிழ் மீது தீராப்பற்று கொண்டவர் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். அதே சமயம் பிற மொழிகளையும் நாம் மதித்து நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் மேலோங்கி நிற்பதால் தான் ஏழு ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தான் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் வாரா வாரம் பல புத்தகங்களை தொலைக்காட்சி நேயர்களுக்கு பரிந்துரை செய்தார். தமிழ் மொழியில் சிறந்த புத்தகங்கள் மட்டுமல்லாமல் பலமொழிகளில் வெளிவந்த புத்தகங்கள் அதன் எழுத்தாளர்கள் அவர்களின் தனித்தன்மை என அனைத்தையும் அம்மேடையில் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துரைத்தார். அதனிடையே மொழிபெயர்ப்பு நூல்களையும் பரிந்துரை செய்திட தவறவில்லை. ஓர் நடிகர் தானே என்று குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடங்கிவிடாமல் பரந்துபட்ட மனதுடன் எழுத்தாளர்கள், புத்தகங்கள் என தமது தேடுதலை விரிவாக்கம் செய்து கொண்டார்.

அதன் பிரதிபலிப்பாக இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்க எண்ணி மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம் அடுத்த மாதம் நடத்திட ஆவண செய்துள்ளார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் ‘மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்’ நடத்துகிறது. ஓரான் பாமுக், ஹருகி முரகாமி உள்ளிட்ட பல சர்வதேச எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் திரு. ஜி.குப்புசாமி பயிற்றுவிக்கிறார். இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள், தங்களது சுயவிவரங்களுடன் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன், சொந்தமாக மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை அல்லது ஒரு சிறுகதையை அந்த மொழிபெயர்ப்பின் மூல வடிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும். பயிற்றுநரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னையில் பயிற்சி அளிக்கப்படும். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம் & கமல் பண்பாட்டு மையம்

நன்றி : தலைவர், ம.நீ.ம & கமல் பண்பாட்டு மையம்