மீனவர்களின் உரிமைகளைக் காக்க நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் !!

  • 68 மீனவர்களையும், 10 படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் !!
    27-12-2021

இராமேஸ்வரம் மீனவர்கள், 8வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 1ம் தேதியன்று இரயில் மறியல் போராட்ட அறிவிப்பும் விடுத்துள்ளனர். கடந்த 18ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடி-இலங்கை நெடுந்தீவு இடையே கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைதுசெய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மறுநாளே மேலும் இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 13 மீனவர்களையும் கைது செய்திருக்கின்றனர். டிசம்பர் 18,19,20 ஆகிய 3 நாட்களில் மட்டும் 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் ; 10 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நியாயமற்றது.

இதனை எதிர்த்து, கைதுசெய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சக்தி, கோபி, குட்வின், ரகு, பிரபு, கருமலையான் உள்ளிட்ட 55 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களையும் விடுதலை செய்யக் கோரியும்; பறிமுதல் செய்யப்பட்ட 10 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரியும் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடித் தொழிலையே நம்பி இருக்கும் மீனவர்களின் நிலை மோசமாக பாதிக்கப்படும்போது, அதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல; கண்டனத்திற்குரியது. ஒவ்வோர் ஆண்டும் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் தொடர்கதையாகிவிட்டன. மேலும், `கொரோனா தடுப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்தது மனித உரிமை மீறும் செயல். இதுபோன்ற வன்முறைகள் நடந்தும் மத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி கடலுக்குள் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கடும் மன உளைச்சலையும் பொருளாதாரரீதியில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றித் தவித்துவருகின்றன.
இலங்கை-தமிழ்நாடு இடையிலான கடல் எல்லைப் பிரச்சனை காலங்காலமாக தொடரும் ஒன்று. மிகக் குறுகிய அளவிலேயே இருக்கும் எல்லைப் பகுதியைக் காரணம்காட்டி தமிழக மீனவர்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இலங்கைக் கடற்படையினர் அத்துமீறல்களை செய்துவருகின்றனர்.

இத்தகைய நிலையை மாற்றவும் மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் தமிழக அரசு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மீனவர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள், கைதுசெய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 68 பேரையும் விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளை மீட்டெடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண இரு தரப்பினர் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு),
துணைத் தலைவர்