அக்டோபர் 16, 2024

நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் மற்றும் திரு.கிரேசி மோகன் ஆகியோரிடையே இருந்த பிணைப்பு ஓர் நண்பனாக, உடன்பிறவா சகோதரனாக திகழ்ந்து வந்துள்ளது. கிரேசி அவர்களுடன் நம்மவர் அவர்கள் தொலைபேசி வாயிலாக மணிக்கணக்கில் பேசியதுண்டு என்றும், தனது அறுபதாம் வயதில் நடைபெற்ற கல்யாணத்திற்கு நம்மவர் அவர்கள் வருவதற்கு சிறிது காலதாமதம் ஏற்படவே அங்கிருந்தவர்கள் “நல்ல நேரம் கடந்து போகிறது, சம்பிரதாயங்களை நடத்துங்கள்” என்று சொல்லவும் அதற்கு கிரேசி அவர்கள் “இவள் (அவரது மனைவியை குறிப்பிட்டு) என்னுடன் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இனியும் அவள் வேறெங்கும் போய்விட மாட்டார், கமல் கண்டிப்பாக வருவதாக சொல்லியிருக்கிறார் அவர் வந்ததும் நிகழ்ச்சியை தொடங்கி விடலாம் அதில் தாமதம் ஆனாலும் எனக்கு கவலையில்லை” என்றும் ஓர் நேர்காணலில் சுவைபட விவரித்துள்ளார். மேலும் பல இடங்களில் உரையாற்றும் போது தனக்கும் கமல்ஹாசன் அவர்களுக்கும் இடையில் உள்ள நட்பு பற்றி பேசுகையில் “தன் வீட்டு ரேஷன் கார்டில் மட்டும் தான் கமல் பெயரை சேர்க்கவில்லை. மற்றபடி அவரும் என் குடும்பத்தை சேர்ந்தவர் தான்” என்றும் நம்மவருக்கும் தனக்கும் இடையே உள்ள சகோதரத்துவம் கொண்ட நட்பை இவ்வளவு அன்னியோன்யமாக குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு நேர்காணலில் “கமல் அவர்கள் தான் எனது விசிடிங் கார்டு. அவரால் தான் சினிமாவுலகில் நான் இவ்வளவு பெயரும் புகழும் பெற்றேன் என் வாழ்க்கையில் கமல் வரவில்லை என்றால் நாடக மேடைகளோடு நின்றிருப்பேன், அதற்காக நான் கமல் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுக்க நன்றி சொல்லிக் கொண்டிருந்தாலும் அதில் எந்த தவறும் இல்லை” என்று தங்கள் இருவரது நட்பினை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்ட தனது தோழர் கிரேசி அவர்களது மறைவு தனக்குள் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி விட்டதாக குறிப்பிடும் நம்மவர் தலைவர் அவர்கள் கிரேசி அவர்கள் விட்டுசென்ற நாடகக் குழுவினரை சந்தித்து அடிக்கடி அவர்களை ஊக்குவித்து நீங்கள் நாடகங்களை மேடையேற்றி தொடர்ந்து இயங்குவதே மோகன் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்று கூறி நினைவு கொள்வார். ஆக தனது நண்பரின் பிறந்த நாளான இன்றும் அவருடனான பணியாற்றிய காலங்கள் பற்றிய நினைவுகளை உசுப்பிவிட்டு கொள்வதாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அன்பை வெளியிட்டுள்ளார்.

“வேடிக்கையான வசனங்களாலும், நகைச்சுவை ததும்பும் கதைசொல்லல் முறையாலும், மறக்கவியலாப் பாத்திரப் படைப்புகளாலும் தமிழ்த் திரையில் தன் தடங்களை விட்டுச் சென்றிருக்கும் அன்பு நண்பர் கிரேசி மோகனின் பிறந்தநாளில் அவரோடு பணியாற்றிய காலங்கள் என்னுள் இனிய நினைவுகளை உசுப்பிப் பார்க்கின்றன.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

கிரேசி மோகன் – அற்புத ஹாஸ்ய கலைஞன். ஓரிடத்தில் அமர்ந்து பேனா பேப்பர் எடுத்து வைத்துக்கொண்டு வெற்றிலைச் சீவல் குதப்பிக் கொண்டே எழுத துவங்கினார் எனில் நகைச்சுவை திரைக்கதையும் அதற்கு தோதாக காலத்திற்கும் நிற்கும் வசனங்களும் சடசடவென அருவியாய் கொட்டும் என தோன்றுகிறது. இவரது நாடக்குழு மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழக கலை அரங்குகளின் மேடைகள் மட்டுமல்லாது உலகின் பல மேடைகளிலும் அரங்கேற்றப்பட்டது. திரை விலகி நாடகங்கள் துவங்கியதும் கதாபாத்திரங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வசனங்களும் அரங்கை அதிர வைக்கும் என்பது கண்கூடான உண்மை. அவரது நாடகம் காணச்சென்ற ரசிகர்கள் எவரும் ஓரிரு நொடிகள் கவனிக்காவிட்டாலும் வசனங்கள் தவறி விடக் கூடும். சிரிப்பொலி எழுந்து அடங்குவதற்குள் அடுத்த வசனம் சிரிப்பைத் துவங்கச் செய்துவிடும். வீட்டுபயோக பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் இத்தனை ஆண்டுகள் கியாரண்டி தருவது போல கிரேசியின் வசனங்களுக்கு லைப் டைம் கியாரண்டி தரலாம் என்பதும் அசைக்கமுடியாத உண்மை.

அப்படி நாடக மேடைகளில் அசத்திக் கொண்டிருந்த கிரேசி மோகன் அவர்களை சினிமாவிற்கு அழைத்து வந்து தான் இயக்கிய பொய்க்கால் குதிரை எனும் படத்திற்கு வசனம் எழுத வைத்தார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்கள். கிரேசியின் நாடகமான மேரேஜ் மேட் இன் சலூன் தான் பொய்க்கால் குதிரையாக உருவானது. அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு தன்னுடன் இணைத்துக்கொண்டு திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத வைத்தார். அதன் பின்னர் 11 படங்களுக்கு இருவரும் ஒன்றாக பயணித்தனர். இதனிடையே கிரேசி மோகன் அவர்கள் மற்ற படங்களுக்கும் கதை வசனங்கள் எழுதி இருந்தார். எனினும் நம்மவர் + கிரேசி நகைச்சுவை கூட்டணி சேர்ந்த படங்கள் சக்கை போடு போட்டது. வயிறு குலுங்கவைக்கும் வைக்கும் வசனங்கள் இன்றுவரை நிலைத்திருக்கிறது. இனியும் எத்தனை காலங்கள் ஆனாலும் மிகச்சிறந்த நகைச்சுவை என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு இவ்விருவரது படங்கள் சாட்சி. குறிப்பாக எந்த ஆபாசமுமில்லாமல், மற்றவர்களை உருவ கேலி கிண்டல் செய்யாமல் எழுதப்பட்ட வசனங்கள் என்பது கூடுதல் சிறப்பு.

இவ்வுலகில் உள்ள குணாதிசயங்களில் ஒன்றான நகைச்சுவை இருக்கும் வரையில் திரு. கிரேசி மோகன் அவர்களின் பேனாவில் இருந்து உயிர்த்து உதிர்ந்த சிரிப்பொலி எழுப்பிடும் வசனங்கள் என்றும் நம்மிடையே காற்றில் உலவிக்கொண்டிருக்கும்.

நன்றி : ம.நீ.ம & சமூக ஊடக இணையதளங்கள்