அக்டோபர் 18, 2024

ஒன்றிய அரசின் ஒலிபரப்பு துறையின் கட்டுபாட்டில் இயங்கும் தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியின் சார்பில் இந்தி தின விழா இன்று (18-அக்டோபர்) தமிழக ஆளுநர் திரு.ஆர்என்.ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய போது தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரிகள் மட்டும் பாடப்படாமல் அடுத்த வரிகளை பாடி முடித்து விட்டனர். நமது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ தமிழ்த்தாய் வாழ்த்தினை குறிப்பிட்ட வரிகள் பாடாமல் தவிர்த்தது தமிழகம் முழுதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஹிந்தி தினம் குறித்தான ஓர் நிகழ்ச்சியில் வேண்டுமென்றே தமிழை அதன் தொன்மை மற்றும் தமிழ்த்தாயின் பெருமையை சிதைப்பதாக கருதப்படுகிறது. இது குறித்த விபரங்களை அறிந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமிழின் மீதும் தமிழின் தொன்மை மற்றும் தனிச்சிறப்புகள் மீதும் அளவில்லா பற்று கொண்டவராவார். ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற விழாவில் மேற்குறிப்பிட்ட வரிகளை பாடாமல் தவிர்த்து இருப்பது தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிக்கும் செயலாக கருதி தமது கடுமையான கண்டனத்தை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது. அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்“. – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.