டிசம்பர் 26, 2024
1924 டிசம்பர் 26 இதே நாளில் பிறந்தவர் அய்யா திரு.நல்லகண்ணு அவர்கள். அரசியலில் நுழைந்து இடதுசாரியாக வாழ்ந்து நூறாவது வயதை தொட்டவர். இன்றைக்கும் அதே பணிவு, நெஞ்சுரம் மிக்க அரசியல்வாதி, பல போராட்டாங்களை முன்னெடுத்து சிறை சென்று இன்னல்களை அனுபவித்தவர்.
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்று பாடல் ஒன்றுண்டு. அதன்படியே வாழும் ஓர் அற்புத மனிதராக அய்யா அவர்கள். இவரது அரசியல் வாழ்வு நேர்மையும் தூய்மையும் கொண்டது. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நல்லகண்ணு அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து உரையாற்றி வந்தார்.
அப்படிப்பட்ட தூய தலைவரான திரு.நல்லகண்ணு அவர்களுக்கு இன்று வயது நூறு. அதன்பொருட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் நூற்றாண்டு விழாவில் கட்சியின் மாநில செயலாளர்களை பங்கு கொள்ளச் செய்து தமது வாழ்த்தினை நேரடியாக பகிர்ந்து கொள்ளும்படி ஆலோசனை வழங்கியுள்ளார்.
தலைவரின் வாழ்த்து
நூறாண்டு காணும் தொண்டு.
எல்லோரும் சமமென்னும் காலம் வரவேண்டும்; நல்லோர் பெரியர் என்னும் காலம் வரவேண்டும் என்பது பாரதியின் கனவு. அதன் நனவான வடிவமே மாபெரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் வாழ்வு.
சமூகத்தில் சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாள் மொத்தத்தையும் அர்ப்பணித்து, அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போர்க்களத்தில் முன்னின்று வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார் ஐயா.
இப்படி ஒருவர் இருக்க இயலுமா என்று வியக்கும் வண்ணம் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார். அவருக்கு என் வாழ்த்து. – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
#NallaKannu100 #KamalHaasan #MakkalNeedhiMaiam #Centrism
நன்றி : மக்கள் நீதி மய்யம்