சென்னை மார்ச் 31, 2022
கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் கட்சித் தலைவராக தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 491 இன் படி ஆட்சியமைத்த நாள் முதல் அரசு முன்பே அறிவித்த திட்டங்கள் செயல்படுத்துதல் மற்றும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் மீதான நடவடிக்கைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று விரிவான அறிக்கையாக (சாதனை அறிக்கையாக) ஊடகங்களின் முன் ரிப்போர்ட் கார்டு ஆக வழங்குவார் என்று சொல்லப்பட்டு இருந்தது.
எனவே மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இது குறித்து கடந்த வருடம் 26.10.21 அன்று ஓர் விரிவான அறிக்கை வெளியிட்டு எப்போது ரிபோர்ட் கார்டு வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் அதைப்பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் அதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல் 10 மாதங்களை நிறைவு செய்தும் கொடுத்த வாக்கினை நிறைவேற்றாமல் தவிர்த்து வருகிறார்கள் என்று தெரிகிறது.
சொல்லியவற்றை கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றி இருந்தால் நிச்சயம் மாதந்தோறும் ரிப்போர்ட் கார்டு வழங்கியிருப்பார்கள். ஒருவேளை கொடுத்த வாக்குறுதிகளை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று திமுக கடந்து செல்லுமானால், தான் இதுவரை நிறைவேற்றியது எது ? நிறைவேற்றத் தவறியது என்ன ? நிலுவையில் உள்ளது என்ன ? என்பதை தெளிவான தரவுகளோடு மக்கள் நீதி மய்யம் விரைவில் வெளியிடும் என்று மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் அறிக்கையின் வாயிலாக தெரிவித்து உள்ளார்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் தந்த 505 வாக்குறுதிகளும் 10 மாதங்களில் நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சொல்லவில்லை. ஆனால் எவ்வளவு நிறைவேற்றியுள்ளீர்கள் என்பதை ஆதாரங்களோடு முதல்வர் அவர்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
சொல்லாததை செய்யவேண்டாம் ! சொன்னதையாவது செய்து தாருங்கள் என்றே கேட்கிறது மய்யம்.