மேல்மருவத்தூர் மே 14, 2022
மதுவினால் நாளுக்கு நாள் பெருமளவில் பல இழப்புகள் தொடர்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை எதையும் கண்டுகொள்ளாது இருந்த முந்தைய அரசின் போக்கும் இப்போது ஆளும் அரசும் போக்கும் ஒரே தொணியில் இருப்பது ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதென்பது தொன்றுதொட்டு வருவதாக படுகிறது. காங்கிரஸ் ஆட்சிகாலத்திற்கு பிறகு அமைந்த கழக ஆட்சிகள் மதுவிலக்கு என்பதை போக்கு காட்டி வருவதும் வாக்குகளை அறுவடை செய்யும் துருப்புசீட்டாகவே வைத்துள்ளது. இவர்கள் மக்களின் மீதான நலன் என்பதை போலி வேடம் கொண்டதாக மட்டுமே நாம் புரிந்துகொள்ள முடிகிறது.
தனியார் மதுபான ஆலைகளிடம் கொள்முதல் செய்து அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனத்தின் வாயிலாக டாஸ்மாக் சில்லறை விற்பனைக்கடைகளின் மூலமாக கிடைக்கும் வருவாயினை கொண்டு எந்த நலத்திட்டங்களை செய்கிறார்கள் எனும் தெளிவான விபரங்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இன்றைக்கு ஒவ்வொரு மதுபானக்கடையின் விற்பனை புள்ளிவிவரங்கள் உயர்ந்துகொண்டே போவது நாட்டில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை கூடுவதாக அல்லது மதுவை அருந்துவோர்கள் அதிகமான அளவினை உட்கொள்வதாக எடுத்துக் கொள்ளலாம். 18 வயது மேற்பட்டவர்கள் மட்டுமே மது அருந்த அனுமதி உண்டு என்றாலும் இன்றைக்கு பள்ளி செல்லும் மாணவர்களின் கைகளிலும் மது பாட்டில்களும் நிரப்பப்பட்ட கோப்பைகளும் இருப்பது வளரும் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குரியதாக மாறி வருகிறது. அதன் எதிரொலியே அடுத்து வரும் செய்தியை (இதுபோன்ற உயிரிழப்புகள் வெறும் செய்தியாகவே நாமெல்லாம் கடக்க வேண்டி இருப்பது இன்னும் வேதனை) நீங்கள் காண்பது.
மேல்மருவத்தூர் அருகே மதுபோதையில் இருந்த பயணி தாக்கியதில் அரசுப்பேருந்து நடத்துநர் பெருமாள் உயிரிழந்துள்ளார். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைக்கு அடிமையாகி, குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
மதுவிற்பனையை கட்டுப்படுத்துவதும், விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதுமே சமுதாயச் சீரழிவைத் தடுத்து நிறுத்தும்.