மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது பரப்புரையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே”, என்று அவர் பேசியது, இன்று அது இந்தியா முழுவதும் விவாதங்கள், ஆதரவு, வழக்கு, அவதூறு பேச்சு, கண்டணங்கள், முன் பினை என பலவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை பற்றி பல கேள்விகள் நம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. அதற்கான பதில்களை காண்போம்.
கேள்வி : கமல்ஹாசன் இவ்வாறு தேர்தல் பரப்புரையில் பேசலாமா? அதுவும் முஸ்லிம்கள் நிறைந்த பகுதியில் பேசலாமா?
பதில் : கமல்ஹாசன் அவர்கள் ஒரு தேசியவாதியின் மகன். நம் நாடு சுதந்திரம் அடைவதற்காக சிறைக்குச் சென்றவர்களில் அவரும் ஒருவர். அதுவும் காமராசருடன் சிறைக்குச் சென்ற சீனிவாசன் அவர்களின் மகன் தான் இந்த கமல்ஹாசன். அப்படிபட்ட அவர், மக்கள் நலனிற்காக ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார். நாட்டில் நிலவும் தீவிரவாதம், பயங்கரவாதம் அழிய வேண்டும். ஒழிய வேண்டும் என பல ஆண்டுகளாக பேசிவருகிறார். அரவக்குறிச்சியில் அவர் பேசியதாக கூறி பிரச்சனையை உண்டாக்குபவர்கள், அதே கமல்ஹாசன் அவர்கள் மெரினா பொதுக்கூட்டத்தில் பேசியதை மறந்துவிட்டனர். இதே கருத்தைத் தான் அன்றும் வைத்தார். ஆனால். அதை யாரும் கேட்கவில்லை. அந்த இடம் திருவேல்லிக்கேணி அருகே ஐஸ்அவுஸ் என்பதையும் மறந்துவிட்டார்கள். அங்கே இஸ்லாமியர்கள் அதிகம் என்பதையும் மறந்து விட்டனர்.
வடக்கே தேர்தல் பரப்புரையில், பிரதமர் அவர்கள், “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஒரு இந்து தீவிரவாதியை காட்ட முடியுமா”, என பேசினாரே, இது யாருக்கான ஆதரவான பேச்சு. யாருக்கு எதிரான பேச்சு? ஒரு இந்துவை காட்ட முடியுமா என்றால், பிற மதத்தில் தீவிரவாதிகள் உள்ளனர். இந்து மதத்தில் அப்படி இல்லை என பொருள் வராதா? அவர் மட்டும் அப்படி பேசலாமா? பிரதமர் கேட்ட கேள்விக்கு தேசிய அளவில் யாரும் பதில் அளிக்கவில்லை. கமல்ஹாசன் பதில் அளித்தார், அவ்வளவுதான்.
கமல்ஹாசன் அவர்கள் பேசிய அந்த பகுதியில் இஸ்லாமியர்கள் மட்டும் தான் இருந்தனர் என்பது போல் ஒரு மாயையை உருவாக்குகின்றனர். இன்றும், அந்த காணொளியைப் பார்த்தால் தெரியும். பலதரப்பட்ட மக்களும் அவரின் பேச்சை கேட்டது நன்றாகத் தெரியும்.
கேள்வி : கமல்ஹாசன் கோட்சேவை தீவிரவாதி என்பதோடு நிறுத்தியிருக்க வேண்டும். அவர் இந்து தீவிரவாதி என ஏன் சொல்ல வேண்டும்?
பதில் : கமல்ஹாசன் அவர்களின் அன்றைய முழு பேச்சையும் பார்க்க வேண்டும். தீவிரவாதம் என்பது இரண்டு பக்கமும் உள்ளது. அதை யார் செய்தாலும் தவறு தான். கண்டிக்க வேண்டியது தான் என கூறிவிட்டுத் தான் கோட்சேவைப் பற்றி பேசுகிறார். மேலும், காந்தியின் கொள்ளுப்பேரனாக நியாயம் கேட்கிறேன், என காந்தி சிலையைப் பார்த்து பேசுகிறார்.
காந்தியை கொன்ற கோட்சே, அவரை கொல்வதற்கு முன் இஸ்மாயில் என்ற பெயரில் அறை எடுத்து தங்குகிறான். இஸ்மாயில் என்றே கையெழுத்திடுகிறான். கொலை செய்ததும் அதை இஸ்லாமியன் தான் செய்தான் என்ற செய்தியை பரப்பி, மீண்டும் ஒரு வன்முறை நடக்கவேண்டும் என செய்கிறான். அதை அறிந்த அரசு, கொன்றது ஒரு இந்து தான் என மக்களுக்கு தெரியும்படி, புரியும்படியாக வானொளியில் செய்தியை ஒலிபரப்பியது. அதுவும் திரும்ப திரும்ப செய்தது. மேலும், கோட்சே பிடிபட்டதும், தனது வாக்குமூலத்தில் தான் ஒரு இந்து என முதலில் கூறிவிட்டுத்தான் தனது வாக்குமூலத்தையே பதிவு செய்கிறான்.
திருமதி இந்திரா காந்தியை கொன்ற போது சீக்கீயர்கள் என்றும், ராஜிவ் காந்தியை கொன்றவர்கள் தமிழ் தீவிரவாதிகள் எனவும், எங்கு குண்டு வெடித்தாலும் அதை செய்தவர்கள் முஸ்லிம் தான் என அவர்களது மதத்தைச் சார்ந்து குற்றம் சாட்டிய போது, அதை கண்டு பொங்காத கூட்டம், வலிக்காத கூட்டம், அப்படி பேசுவது தவறு, தீவிரவாதம் என்பது எல்லா மதத்திலும் உண்டு என்று கூறி, அது இந்து மதத்திலும் உள்ளது; அவ்வாறு பேசுவது தவறு என்று கூறிய கமல்ஹாசன் தவறானவரா? அவர் பேச்சு தவறானாதா? சற்றே உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
கேள்வி : முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும் கமல்ஹாசன் ஏன் இலங்கை குண்டு வெடிப்பைப் பற்றி கேள்வி கேட்கவில்லை?
பதில் : இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பிற்கு அன்றைய தினமே கண்டனம் தெரிவித்தார் கமல்ஹாசன். மதத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதம் தவறு. மனித தவறுகளுக்கு தீவிரவாதம் என்றும் தீர்வாகாது என ஏப்ரல் 21 அன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஊடகங்கள் வழக்கம் போல் அதை பெட்டி செய்தியாக்கி விட்டன. அது தெரியாமல், இலங்கை சம்பவத்திற்கு எதுவுமே பேசவில்லை என்பது தவறான கண்ணோட்டமாகும்.
கேள்வி : தற்போது மட்டும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுவது என்பது, அவர்களின் வாக்குகளை, சிறுபான்மையினரின் வாக்குகளை பெற முயற்சியே இது. இதை கமல்ஹாசன் செய்யலாமா?
பதில் : கமல்ஹாசன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களிடமே எதிர்த்து கேள்வி கேட்டவர். அதனால், இன்றைக்குத் தான் ஆதரிக்கிறார் என்பதல்ல. தவறு என தெரிந்தால் தட்டிக் கேட்பவர் தான் கமல்ஹாசன். மாட்டுகறி சாப்பிடுவது, தேசிய கீதம் பிரச்சனை, பசுவதம் என்கிற பெயரில் மனித வதம் என்று அனைத்தையுமே எதிர்த்து கண்டித்துள்ளார். மேலும், இது போல் பேசித்தான் வாக்குகளை வாங்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
வாக்கு அரசியல் தான் முக்கியமென்றால், முழு மதுவிலக்கு என்று தனது பரப்புரையில் பொய்களை அள்ளிவிட்டு, தாய்குலத்திடம் வாக்குகள் வாங்க முயற்சித்து இருக்கலாம். அப்படி செய்யாமல், பூரண மதுவிலக்கு என்பது நடவாத காரியம். அதை படிபடிப்படியாகத் தான் நிறைவேற்ற இயலும் என்கிற உண்மையைச் சொல்லி வாக்குகள் கேட்டார் கமல்ஹாசன். திராவிட கட்சிகள் தாங்கள் வைத்துள்ள சாராய தொழிற்சாலைகளை மூடாமல், ஆட்சிக்கு வந்தால் மூடுவோம், பூரண மதுவிலக்கு செய்வோம் என்று பொய் சொல்லி வாக்குகள் கேட்கிறார்கள். அது போல் செய்யவில்லை கமல்ஹாசன். எனவே, வாக்கு அரசியலுக்காகத் தான் அவ்வாறு பேசினார் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத வாதம்.
கேள்வி : கமல்ஹாசன் தனது பேச்சின் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டார். அவர் அவ்வாறு செய்யலாமா?
பதில் : கமல்ஹாசன் இந்துக்களை புண்படுத்திவிட்டார் என கூறுவது #பாஜக #இந்துமுன்னனி மற்றும் பாஜகவின் தோழமை கட்சியான #அதிமுக , அதிலும் இரண்டு அமைச்சர்கள் தானேத் தவிர, சாதரண மக்கள் அல்ல. இந்து மதத்தின் ஏக போக உரிமையாளர் போல் இவர்கள் தான் பேசிவருகிறார்களேத் தவிர, பொதுமக்கள் அல்ல.
கமல்ஹாசன் அரவக்குறிச்சிக்குப் பிறகு, திருப்பரங்குன்றத்தில் பேசும் போது, கூட்டம் நிரம்பிவழிந்தது. அவர் பேசியது தவறென்றால், அவ்வளவு கூட்டம் வருமா? மேலும், பெரும்பான்மையானவர்கள் வாக்குகளும் முக்கியமில்லையா? ஒரு மதத்தைத் தாழ்தி பேசினால், அந்த மதத்தினர் எப்படி வாக்களிப்பார்கள்? அந்த அடிப்படை அரசியல் கூடவா தெரியாது கமல்ஹாசன் அவர்களுக்கு? எனவே, இந்து மத்தை புண்படுத்திவிட்டார் என்பது நொண்டிசாக்கு.
கேள்வி : கமல்ஹாசன் இந்திய அளவில் பிரபலமாவதற்குதான் இவ்வாறு பேசியுள்ளார். அது சரியா?
பதில் : கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் பரப்புரை நடந்த இடத்தில் காந்தி சிலையை கண்டதும், ஒரு வரலாற்று உண்மையை பேசினார். அதை தமிழக பாஜகவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், அவர்களின் தாய்வீடான RSS ல் இருந்த கோட்சேவை சொன்னதும் சகித்துக் கொள்ள இயலவில்லை. அதனால் எதிர்வினை ஆற்றினர். அவர்களை அறியாமல் கோட்சேவை தீவிரவாதி என் ஒப்புக் கொண்டனர். கஜா புயலுக்கு கமல்ஹாசன் பிரதமர் அலுவலகத்திற்கு நிவாரணம் கேட்டு கடிதம் மற்றும் காணொளி அனுப்பினார். அதையெல்லாம் கண்டுகொள்ளாத பிரதமர் கமலின் கருத்திற்கு எதிர்கருத்து சொன்னார். அவர்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருபடி மேலே போய், கோட்சே ஒரு தேசத்தியாகி என்று கூறி, பின்னர் எதிர்ப்பு வலுத்ததும் பின் வாங்கினார்கள்.
இங்கே, தமிழகத்தில் அதிமுக அமைச்சர் ராஜந்திரபாலாஜி தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து, தான் ஏற்ற உறுதி மொழியை மீறி, ஒரு ரவுடி போல், “கமல்ஹாசன் நாக்கை அறுக்கவேண்டும்”, என வன்முறையைத் தூண்டுவது போல் பேசியுள்ளார். இதை கண்டிக்க திராணியில்லாமல், கமல் தேசிய அளவில் பிரபலமாகத் தான் இப்படி பேசினார் என சிலர் பாஜகவிற்கு காவடி தூக்குகின்றனர்.
கமல்ஹாசன் அவர்களுக்கு தமிழக நலன் தான் முக்கியம். ஆனால், அவர் விரைவில் தேசிய அளவிலும் தனது தடங்களை பதிப்பார்.
கமல்ஹாசனும் சரி, மக்கள்நீதிமய்யமும் சரி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. மக்கள் நீதி மய்யத்தில் பல மதம், சாதி என பலரும் உள்ளனர். ஆதலால், அது என்றுமே மற்றொரு மதத்திற்கு எதிராக கருத்துகளை பரிமாறாது. கமல்ஹாசன் என்றுமே, தனது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிப்பவர் கிடையாது. எந்த கருத்தாகினும் அதை இடம், ஏவல், பொருள் பாராமால், உண்மையை மட்டுமே பேசுபவர். உண்மையை சொல்ல எந்த நேரத்திலும், எங்கும் தயங்கியதும் இல்லை.
பாஜக-அதிமுக வின் இந்த அரசியல் சூழ்ச்சியை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கமல்ஹாசன் அவர்களின் நேர்மையான அரசியலை காண சகியாமால், அவர் மீது வழக்குகள் போட்டு அவரை ஒன்றும் இல்லாமல் செய்யப் பார்க்கின்றன. அவர்களின் இந்த பேராசை நிச்சயம் நிறைவேறாது. மக்களின் பேராதரவோடு, #கமல்ஹாசன் அவர்களின் லட்சியம் வென்றே தீரும்.
நன்றி : திரு. R. பாலமுருகன்,