சென்னை – நவம்பர் 08, 2022
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் மட்டுமல்லாது அயல்நாடுகளில் அதாவது அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ் போன்ற இடங்களிலும் சிறப்பாக நிகழ்ந்தது.
தமது வழிகாட்டியாக நற்பணிகளை செய்ய உத்வேகம் தந்த ஒரு உன்னத தலைவனின் பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடினர் ரசிகர்களும் மய்யம் உறவுகளும். அவசியமற்ற எந்த விஷயங்களும் இல்லாமல் அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் வழங்குதல், நோட்டு புத்தகங்கள் வழங்குதல், குடும்பத் தேவைகளுக்கான பொருட்கள் வழங்குதல் என மிகச் சிறப்பாக தமது உள்ளத்தில் இருந்த மகிழ்ச்சியினை இவ்வாறு இயலாதவர்களுக்கு செய்து அவற்றை வெளிப்படுத்தினார்கள்.
கட்சிக் கொடிகளும் ஆங்காங்கே பட்டொளி வீசிப் பறக்க விடப்பட்டன. அவ்வேளை ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆடைகள், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் பென்சில், வயதான மூத்த குடிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம்கள் பல இடங்களில் நடைபெற்றன.
சென்னை மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள், “நாம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறான நற்பணிகளை செய்து வருவதை குறிப்பிட்டு எனது பிறந்தநாளுக்கு நான் கேக் வெட்ட வரவில்லை அதற்கு பதிலாக கத்திரி வாங்கி கொடுத்தால் முடி திருத்துபவர் தனது தொழிலை மேற்கொள்வார் சிந்திக்கும் நாம் இனி நற்பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் நடிப்பு எனது தொழில் அரசியல் எனது கடமை” என்றும் பேசினார்.
எனவே அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பல தலைவர்களும், அறிஞர்களும், மிக முக்கிய பிரமுகர்களும் மிக முக்கியமாக எண்ணிலடங்கா ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் தங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக ஊடகம், பத்திரிகை மற்றும் ஏனைய பல வழிகளில் தெரிவித்திருந்தார்கள். அதனை மிகுந்த மகிழ்வுடன் ஏற்றுக் கொண்ட தலைவர் அவர்கள் “உங்கள் அனைவரின் வாழ்த்துக்களால் தமது அகம் மகிழ்ந்து உள்ளதாக” தெரிவித்தார் அதனையொட்டி தனக்கேயுரிய பாணியில் இலக்கிய நயம் மிக்க மிக அழகான வார்த்தைகளை தொடுத்து நன்றி சொல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை படித்த பலரும் புருவம் உயர்த்தி ஆச்சரியம் கொண்டனர் ஏனெனில் அழகு தமிழினால் அமைந்திருந்த அந்த அந்த சொற்கள் பலரையும் சிந்திக்க வைத்தது. உண்மையாகச் சொல்லப்போனால் இதில் பல விவாதங்கள் கூட நடைபெற்று இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதில் குறிப்பிடும்படியாக சிவகங்கையை சேர்ந்த பொது மருத்துவரான டாக்டர் பரூக் அப்துல்லா எனும் அன்பர் தமது முகநூல் பக்கத்தில் மய்யத் தலைவரின் நன்றி அறிவிப்பினை குறிப்பிட்டு அதனை எடுத்துக் கொண்டு பத்தி பத்தியாக அழகான விளக்கங்களால் கோர்த்து ஓர் பதிவினை இட்டு இருந்தார். எனவே இதன் தொடர்ச்சியாக அவரது பதிவினை உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம்.
டாக்டர் பாரூக் அப்துல்லா அவர்களின் முகநூல் பதிவு :-
தமிழ் இலக்கணம் அறிய
நடிப்பிலக்கணத்தில் கரைகண்ட திரு. கமல்ஹாசன் அவர்களின் இந்தக் கீச்சுப் பதிவை பகுப்பாய்வு செய்வதென முடிவு செய்து ஆரம்பிக்கிறேன்
டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி பகிர்வதாய் அமைந்தது அந்த கீச்சு. ( ட்விட்டரில் ட்வீட் செய்வது கீச்சுவது என்று தமிழில் அழைக்கப்படுகிறது)
தமிழ் அறிந்த ஆன்றோர் சான்றோருக்கானதல்ல இப்பதிவு
கடந்த சில வருடங்களாக தமிழுடன் தொடர்பு அத்துப்போனவர்களுக்கானது.
பேச்சு மொழியாகவும் கேட்டல் மொழியாகவும் இருக்கும் தமிழ்
படிக்கும் மொழியாகவும் எழுதும் மொழியாகவும் இருந்தால் மட்டுமே நிலைக்கும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதால் என்னுள் தினமும் தமிழில் படிப்பதையும் எழுதுவதையும் கடமையாகவே ஆக்கிக் கொண்டேன்
இது நான் தமிழுக்குச் செய்யும் சிறு பணியாகவே பார்க்கிறேன்
எனவே தயவு கூர்ந்து இந்தப்பதிவை அரசியல் ரீதியாகவோ வேறு எந்த ரீதியாகவோ அணுகுதல் வேண்டாம்
சரி வாருங்கள் தமிழாடுகளே கீச்சுப்புல்லை அடிவரை மேய்வோம்…
( எம்ஆர்பி பரீட்சை எழுத இருக்கும் மருத்துவர்களுக்கும் உதவக்கூடும்)
“பரந்த வெளியில் ஆரத்தழுவ
அவாவும் ஆதுரக்கை
விரித்திருந்தேன்”
பரந்த வெளியில் – விசாலமான இடத்தில்(WIDE SURFACE AREA)
ஆரத்தழுவ – அன்புடன் கட்டியணைக்க
அவா – ஆசை / விருப்பம்
( 90களில் கடிதம் எழுதியவர்களுக்குத் தெரியும் . இங்கு அனைவரும் நலம்
அங்கு அனைவரின் நலம் அறிய அவா அல்லது ஆவல் என்று எழுதுவோம்)
ஆதுரக்கை – ஆதுரம் + கை
அடுத்த வரிகளில் “விரித்திருந்தேன்” என்று கூறுவதால்
“ஆதுரம் + றெக்கை” என்று இலக்கணமின்றிப் பிரித்தாலும் பொருள் வருகிறது
ஆதுரம் என்றால் பரிவும் அக்கறையும் கலந்து உணர்ச்சி.
இதற்கு நேரெதிர் உணர்ச்சி “ஆதிக்கம்” இது அக்கறையற்ற அத்துமீறல்
ஆதுரத்துடன் கைகளை விரித்திருந்தேன்
இங்கு றெக்கை என்று பொருள் கொண்டால் அந்த றெக்கை கொண்ட பறவை சக்கரவாகப்பறவையாக இருக்கக்கூடும்
அடுத்த வரிகளில்
“ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன”
என்கிறார்
ஆகாயத்துளிகளை மட்டும் பருகி வாழும் சக்கரவாகப்பறவையாக தன்னை உருவகம் செய்து கொண்டிருப்பது தெரிகிறது.
திரு.வைரமுத்து “என் சுவாசக் காற்றே” படத்தில் ” சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனோ” என்ற பாடலில் “சக்கரவாகமோ மழையை அருந்துமாம். நான் சக்கரவாகப் பறவையாவேனோ” என்பார்
அடுத்த கீச்சில்
“திரைக் கலைஞர், நண்பர் என ஒவ்வொரு துளிக்கும் தனித்தனியே நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா”
இதில் நாப்பரப்பு = நாவின் பரப்பு
நாக்கு + பரப்பு
சக்கரவாகமாக தன்னை உருவகப்படுத்தியிருந்தமையால்
கிடைத்த வாழ்த்துகளை மழைத்துளிகளாக உவமை செய்து
அவையனைத்துக்கும் நன்றி கூற
நாவினால் முடியாது
அவ்வாறு நன்றி கூறிக்கொண்டே சென்றால் நாட்களும் பத்தாது.
என்பதை
“போதா” என்று முடிக்கிறார்
“போதாது” என்பதை “போதா” என்று முடிக்கிறார்
இது பன்மை வினைமுற்றாகும்.
நாப்பரப்பும் நாட்பரப்பும்
போதாமல் தவிக்கிறேன் என்று முடிக்க வேண்டியதை
“போதா” என்று முடித்து விட்டார்
“மனமே தருகிறேன்.. ஏந்திக் கொள்க”
அனைவருக்கும் அன்பை வெகுமதியாகத் தருகிறேன்.
பெற்றுக் கொள்க என்று எழுதாமல்
ஏந்திக் கொள்க என்று கூறும் தன்மையில்
அவரது மனம் இந்த வாழ்த்துகளாலும் அன்பாலும் கனமாக ஆனதை சுட்டுகிறார்
லேசான பொருளை பெற்றுக் கொள்ளலாம்
கனமான பொருளைத் தான்
ஏந்த வேண்டியிருக்கும்
இன்னும் ஏந்துதல் என்பதற்கு கவனமாகப் பெற்றுக் கொள்ளுதல் எனும் பொருளும் கொள்ளலாம்
என் மனதை உடைத்து விடாமல் கவனத்துடன் பெற்றுக் கொள்க என்று HANDLE WITH CARE என்ற அர்த்தத்திலும் பொருள் கொள்ள முடியும்
திரு.வைரமுத்து கண்ணாமூச்சி ஏனடா பாடலில்
“என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையோ
அதற்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையோ
நெஞ்சின் அலை உறங்காது” என்பார்
ஆம்… ஒவ்வொருரின் மனதின் மீதும் HANDLE WITH CARE ஒட்டப்பட்டுத் தான் இருக்கிறது
நாம் தான் பார்த்து பக்குவமாக கையாள வேண்டும்
தீயினால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே நாவினால் சுட்ட வடு
இன்று காலை வயிற்றுப் பசி போக்கக் கொடுத்த எனது தாய்க்கும்
தமிழ்ப்பசி போக்கக் கொடுத்த திரு கமலுக்கும்
இதைப்பார்த்து படித்துக் கடக்கும் நண்பர்களுக்கும்
நன்றி
டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
நன்றி : மருத்துவர் திரு.பாரூக் அப்துல்லா, சிவகங்கை