புது தில்லி : டிசம்பர் 24, 2022
நம் பாரதத்தின் கடந்தகால நேர்மையை நாளைய நம் வளமையை நோக்கி வழிநடத்தும் பயணம் இது என்றே நான் உணர்கிறேன் – திரு. கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
இந்திய தேச ஒற்றுமைக்காக இறையாண்மையை காக்கும் பொருட்டு கட்சி பாகுபாடில்லாமல் அழைத்தார் பாரத் ஜோடோ யாத்ராவை முன்னெடுத்த இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்கள். இந்த நடைபயணத்தில் பங்குபெறுமாறு மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை அன்புடன் அழைத்ததின் பேரில் புது தில்லி சென்றார் மய்யத்தலைவர், உடன் கட்சியின் அனைத்து மேல்மட்ட நிர்வாகிகள் முதற்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் புது தில்லிக்கு சென்று நடைபயணத்தில் பங்குகொண்டனர். இதில் இன்னொரு முக்கிய விஷயமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது மய்யத்தின் மீதுள்ள பற்றாலும் தலைவரின் மீதுள்ள அதீத அன்பினாலும் எந்தவித முன்பதிவுமில்லாத (Unreserved) ரயில் பயணத்தினை மேற்கொண்டார் சிவகுமார் என்பவர். இதனை அறிந்துகொண்ட மாநில செயலளர்கள் சிவகுமாரை தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டியில் முறையான அனுமதி பெற்று தங்களுடன் பயணம் மேற்கொள்ளச் செய்தனர்.
இதனைப்பற்றி அறிந்த தலைவர் பெருமகிழ்வடைந்து நெகிழ்ச்சியில் உடனே அந்த நள்ளிரவில் அத்தொண்டரை அழைத்துப் பேசிட முயற்சிக்கவே முடியாமல் போனதால் மறுநாள் காலையில் மாநில செயலாளர் வழியாக தொடர்பு கொண்டு நலன் விசாரித்தது பெரும் உத்வேகம் தந்ததாக அவர் தெரிவித்தார். பிற கட்சிகளில் இது போன்ற நிகழ்வுகள் உருவாக்கப்படும் செயற்கையாக கட்டமைக்கபடும் ஆனால் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தொண்டர்களை மதிக்கும் ஓர் அரசியல் இயக்கமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி.
மேற்சொன்னது ஓர் சிறப்பு என்றால் அடுத்து இன்னுமொன்று உள்ளது மக்கள் நீதி மய்யம் மதுரை மாவட்ட செயலாளர் V.B.மணி எனும் ஓர் அன்பரின் உடன் வந்த நிர்வாகி சிலர் புது தில்லியில் ரிக்ஷா எனும் மிதிவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு சிறிய ஒலிபெருக்கி மூலம் பல சாலைகளில் நடைபெறப்போகும் பாரத் ஜாடோ யாத்ராவில் திரு கமல்ஹாசன் அவர்கள் ராகுல்காந்தி அவர்களுடன் கலந்துகொள்ளவிருப்பதை நமது தமிழில் அழகாக அறிவித்தபடியே ஒவ்வொரு வீதியிலும் விளம்பரப்படுத்தும் வகையில் உலா வந்தனர்.
இப்படி பலர் பலவழிகளில் தில்லி மாநகருக்கு சென்று இந்திய தேசத்தின் சகோதரத்துவம் மற்றும் சாதி இனம் மதம் என எந்தப் பிரிவினையும் இல்லாமல் ஒன்றிணைந்து அழிக்கப்பட்ட மாண்பை மீட்டெடுக்க நடைபெற்ற நடைபயணத்தில் தங்களை முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர்.
சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு ராகுல்காந்தி மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு தலைவர்களும் தத்தமது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் சூழ நடைபயணம் மேற்கொண்டனர். பின்னர் செங்கோட்டையின் முன்பு அமைக்கபட்டிருந்த மேடையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் கடந்த மாதம் தலைமைப் பொறுப்பேற்ற திரு மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் இணைந்து நின்ற திரு கமல்ஹாசன் அவர்கள் ராகுல்காந்தி கேட்டுகொண்டதற்கிணங்க தமிழில் தனது உரையைத் துவங்கி பின்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினார்.
அதில மிகமுக்கிய கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைபயணத்தில் தான் கலந்துகொண்டது இந்திய நாட்டின் மகன் என்றும் இதனால் எந்த மறைமுக அரசியல் நகர்வுகள் இல்லை எனவும் தெரிவித்தார். தேசப்பிதாவின் மானசீக பேரனும் மற்றும் ஆத்மார்த்த சீடனாகிய நானும் காந்தியாருடன் நெருங்கிப் பழகியவரும் நமது சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருமான திரு நேருவின் பேரனுமான ராகுல்காந்தியுடன் கலந்து கொண்ட இந்த பாரத் ஜாடோ யாத்ரா எனது வாழ்வில் நடைபெற்ற மிகமுக்கிய நிகழ்வு என்றும் குறிப்பிட்டார். மேலும் மதவாதமும் இனவாதமும் ஒரு போதும் நமது இந்திய இறையாண்மையும் ஒற்றுமையும் குலைக்கக் விடக்கூடாது என்றவர் அப்படிக் பிரிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களின் எண்ணம் ஈடேற விடாமல் காத்து நிற்பது இந்தியராகிய ஒவ்வொருவரின் கடமையும் கூட என்றார். இந்தியாவை துண்டாட உதவக்கூடாது இந்தியாவை இணைக்கவே உதவிட வேண்டும் என்று முத்தாய்ப்பாக கூறியது இன்னும் சிறப்பு.