பிப்ரவரி 03, 2025

திராவிட கழகத்தில் தந்தை பெரியாரின் சீடராக தமது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் தனது அரசியல் ஆசானின் மீது சிறிது முரண் ஏற்படவே தன்னுடன் இயங்கிவந்த தோழர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தினை 1949 இல் துவக்கினார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்களிடையே இயைந்து பல போராட்டங்களை முன்னெடுத்து தலைமை தாங்கி செய்து வந்த அரசியல் 1967 இல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் கடைசி முதல்வரானார். பின்னர் தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்து அரசாணையில் இடம்பெறச் செய்து தமிழ்நாட்டின் முதல் முதல்வராக செயல்பட்டு இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக பேசச் செய்தார். கல்விக்கூடங்கள் இயங்கச் செய்தும், இந்தித் திணிப்பை எதிர்த்தும் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆங்கிலப் புலமையும் தமிழில் சிறந்த தேர்ச்சியும் கொண்டவர் எழுத்தாளராகவும் பரிமளித்தார். தனது சொல்வன்மையால் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்த போதிலும் மிகக் குறைந்த காலமே முதல்வராக பதவி வகித்துள்ளார். புற்றுநோயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு அயல்நாடு சென்றும் அங்கே சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார்.

திராவிட நாடு என்று முழக்கமிட்ட இயக்கத்தின் தலைவராக இன்று வரை மக்களிடையே நினைவுகளுடன் திகழ்கிறார். அண்ணா அவர்களின் நினைவு நாளான இன்று அவரது புகழைப் போற்றும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலி வெளியிட்டுள்ளார்.

“எத்தனை இடையூறு வந்தாலும் பகுத்தறிவுப் பாதையே நம்மைச் சிறந்த இலக்குக்கு அழைத்துச் செல்லும் என்று பேசி, அதைக் கடைப்பிடித்தும் நமக்கெல்லாம் வழிகாட்டி, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவே மாறி நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம்.” திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்