கோவை, ஆகஸ்ட் 30, 2022
இது இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் என பல நூறு கோடிகள் கொட்டி செலவு செய்தாலும் விழலுக்கு இறைத்த நீராய் போனது இந்த ஓர் நாள் மழையில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
கொங்கு பெல்ட் எனும் கோவை சுமார் 4723 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. சரி உள்ளூர் சாலைகள் வேண்டுமானாலும் சரியாக போடப்படவில்லை என்றாலும் பிரதான பகுதிகள் முழுதும் சேறும் சகதியுமாக குண்டும் குழியுமாக பெயர்ந்து கிடக்கிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. ஜெயித்தவர்கள் யாரும் இதுவரை எட்டியும் பார்க்கவில்லை. சில தினங்கள் முன்பு முதல்வர் வந்த போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் வந்து போகும் வழிகளை மட்டும் சாலைகளில் சிதைவுகளை மறைத்து ஒட்டு போட்டும் மீடியன்களில் கருப்பு வெள்ளை பட்டையாக (அதுவும் ஒரு புறம் மட்டுமே) அடித்த நகைச்சுவையும் நடந்தேறியது. இவை எல்லாமே நாடகம் என்பது பெய்த மழையில் காட்டிக் கொடுத்தது.
சேதம் அடைந்து இருக்கும் பல பகுதிகளையும் விரைவில் சரிசெய்து மழைநீர் வடிகால்கள் பாதைகளை செப்பனிட்டு அமைத்தால் மட்டுமே தீர்வு காண முடியும். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 15 மாதங்கள் கடந்து விட்டது, எனினும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மாநகராட்சி மேயர் என எவரும் கண்டுகொள்ளாத கோவை இனி வரும் காலங்களில் மழையில் சில்லு சில்லாக சிதிலமாகி மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மக்கள் நீதி மய்யம் மழைக்கால நடவடிக்கையாக என்னென்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக தனது கருத்துகளை அறிக்கையில் முன் வைத்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, மழைக்கால பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது.
“கோவையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழை நகரையே ஸ்தம்பிக்கச் செய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள், மேம்பாலங்களின் கீழ் தேங்கிய வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மாணவ, மாணவிகள், வேலை முடிந்து வீடு திரும்பியோர் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பல இடங்களில் மழை நீருடன், கழிவுநீரும் கலந்தோடியது. குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமப்பட்டனர். ஒரு மணி நேர மழையைக்கூட கோவை மாநகரம் தாங்கவில்லை.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் என்ற பெயரில் பல நூறு கோடி செலவளித்தும், மழையால் கோவை தத்தளிப்பதை தடுக்க முடியவில்லை.மழைக்காலம் தொடங்கும் முன்னரே இப்படி என்றால், அடைமழையை கோவை தாங்குமா?. எனவே, உடனடியாக வடிகால்கள் சீரமைப்பு, சாக்கடைகளைத் தூர்வாருதல், பள்ளங்களைச் சீரமைத்தல் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, மழைக்கால பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமென ம.நீ.ம வலியுறுத்துகிறது.”