கோவை அக்டோபர் 26, 2022
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு. முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு தங்கவேலு அவர்கள் அறிக்கை
கோவை மாவட்டம் உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது காரில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும் அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதும் காரை ஓட்டி வந்த உக்கடம் ஜி எம் நகரைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு கோவை விரைந்தார் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கே விசாரணையை தீவிரப்படுத்தினர் தடையவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர், உடைந்த காரின் உதிரி பாகங்கள் அங்கு சிதறி கிடந்த ஆணிகள் கோலி குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினர்.
சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் பல்வேறு திதிக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலியானவரின் பின்னணியும் அவருடன் நெருக்கமாக இருந்தவர் கொடுத்த தகவல்களும் பீதியூட்டும் வகையில் உள்ளன.
இதில் காவல்துறையினரின் விரிவான செயல்பாடுகளும் ஐந்து பேரை கைது செய்துள்ளதும் பாராட்டுக்குரியவை அதே சமயம் முழு சதியையும் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னணியில் வெளிநாட்டு தீவிரவாத கும்பல் இருக்கிறதா என்றும் தீர விசாரிக்க வேண்டும்.
1998ல் தொடர் குண்டுவெடிப்பால் நிலைகுலைந்த கோவை அதிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகின அமைதியும் தொழில் நகரின் வளர்ச்சியும் குலைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப்படுத்த தமிழக அரசும் காவல்துறையின் தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியம் என மக்கள் நீதி மையம் அறிக்கை விடுத்துள்ளது.