சீர்காழி – நவம்பர் 14, 2022
இயற்கையின் கொடையில் மிக முக்கியமானது மழை !
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் மழை என்பது இன்றிமையாதது என்பது நிதர்சனம். செடி கோடி மரம் விலங்குகள் மனிதர்கள் என தண்ணீர் மிக முக்கியம். மழை நீர் உயிர் நீர் என்பார்கள்.
அத்தகைய மழை நீர் பல சமயங்களில் அதீதமாக பொழிந்து அணைகள், பள்ளங்கள், குளம், குட்டைகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட பல நீர் நிலைகள் நிரம்பி வழிந்து உபரியாக வெள்ளமாக மாறி விடும் நேரங்களும் உண்டு. அவை மட்டுமல்லாது பெய்யும் மழையும் சில பல காலங்களில் எதிர்பார்க்கும் அல்லது கணிக்கும் அளவீடுகளை விட அதிகமாக பெய்த வரலாறுகளும் உண்டு.
வெள்ளக்காடாகும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் நீரில் மூழ்கி விவசாயம் கிட்டத்தட்ட முக்கால் சதவிகிதம் சேதமடைந்து விடும். இயற்கையை எந்த கூக்குரல் இட்டாலும் அல்லது எதனாலும் கட்டுப்படுத்த இயலாது. கொட்டித்தீர்க்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் ஆறாக மாறும்போது வயல்வெளிகள் மற்றும் குடியிருப்புகள் பலிகடாவாக ஆகிடும்.
அப்படி சமீபத்தில் பெய்த மற்றும் பெய்யும் கனமழையால் பல மாவட்டங்கள் பாதிப்புகள் அடைந்துள்ளன. குறிப்பாக இதுவரை பெய்யாத அளவிற்கு சீர்காழியில் ஒரே நாளில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் சீர்காழி நிலைகுலைந்து போயுள்ளது. சரிந்து கிடக்கும் மின்கம்பங்கள் மின்சாரம் தடைபட்டுள்ளது தகவல் தொடர்புகள் ஸ்தம்பிக்கும் அளவிற்கு அதிகப்படியான சேதாரங்கள் நிகழ்ந்துள்ளன. மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் சாலைகளும் பல இடங்களிலும் துண்டிக்கப்பட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் சிதைந்து போயுள்ளன. மயிலாதுறை மாவட்டமும் சேதாரம் ஆகியுள்ளது சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. 35 ஹெக்டேர் அளவுள்ள பயிர்கள் மூழ்கியுள்ளதாக ஆளும் கட்சியின் அமைச்சர்களே தகவல் கூறியுள்ளனர். சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் உட்பட சுற்றுவட்டாரங்களில் உள்ள வயல்கள் குளங்கள் போல காட்சியளிக்கின்றன.
தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது குறித்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். மின்சாரம் தடைபட்டு சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பிற்குள்ளான பொதுமக்கள் வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிக சரியான பாதுகாப்பும் உணவு மற்றும் அடிப்படை வசதிகளும் துரிதமாக ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசையும் பேரிடர் மீட்புப் பணிகள் ஆணையத்தையும் கேட்டுக் கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் மேற்சொன்னவாறு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள சாலைகள் பாலங்கள் போன்றவற்றை தகுந்த குழுக்களை அமைத்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.
மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை மற்றும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ள பயிர்களின் சாகுபடி தரவுகளை மிகத்துரிதமாக கணக்கெடுத்து ஆய்வு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்திடும் வகையில் தகுந்த நிவாரணத்தை வழங்கிடவும் வேண்டும் என முக்கியக் கோரிக்கையையும் முன்வைத்துள்ள ம.நீ.ம
கடந்த ஆண்டுகளில் கொரொனோ தொற்றின் காரணமாக நலிவடைந்துள்ள இந்தச் சூழலில் மழையினால் உண்டான பாதிப்புகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதால் பல இன்னல்களுக்கிடையில் விவசாயம் செய்துவந்த நிலையில் தற்போது பெய்துள்ள கனமழையினால் நமது விவசாயிகள் தங்களது உடைமைகளை இழந்து கண்ணுக்கு கண்ணாக வளர்த்தெடுத்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கி கடும் பொருளாதார சிக்கலில் வீழ்ந்துள்ளனர். இவற்றில் இருந்து மீளவே மிகுந்த கடினமாக இருக்கக்கூடும். இதுவரை அவர்கள் பெற்ற்றுள்ள பயிர்க்கடன்கள் பற்றிய முக்கியமான முடிவுகளையும் எடுத்து விவசாயத்தையும் விவசாயிகளையும் அவர்களின் வாழ்வாதாரம் மீட்கப்படவேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
இனியும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரியவருவதால் அரசு இயந்திரங்களும் பேரிடர் மீட்புக்குழுவினரும் தகுந்த முன்னேசெரிக்கை நடவைக்கைகளை மேற்கொண்டு மிகுந்த சேதங்கள் உண்டாகாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகளை மிகத்துல்லியமாக ஆராய்ந்து மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்களை வேண்டிய எண்ணிக்கைகளில் தயார்நிலையில் வைப்பதும் வேண்டும். பேரிடர் தடுப்புப் பணிகளில் சிறிய அளவில் கூட கவனம் சிதையாமல் அக்கறையின்மை குறையாமல் இருந்திட வேண்டும் எனவும் எந்தவிதமான லட்சியமும் இன்றி மக்களைக் காக்கும் பணிகளில் செயல்பட வேண்டும் எனவும் தமிழக அரசினை கேட்டுக் கொண்டுள்ளது மக்கள் நீதி மய்யம்.