ஈரோடு : டிசம்பர் 14, 2024

பதிவு புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 15, 2024

தந்தை பெரியாரின் பேரனும் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர், திரு.EVKS இளங்கோவன் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் மிக முக்கிய தலைவராகவும் அப்போதைய காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் ஜவுளித்துறை இணையமைச்சராக பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்துள்ளார். கடந்த 2021 ஆண்டில் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வான திரு. திருமகன் ஈ.வெ.ரா. அவர்கள் மாரடைப்பின் காரணமாக கடந்த ஆண்டு 2023 இல் இயற்கை எய்தினார். அவர் EVKS இளங்கோவன் அவர்களின் மகனாவார். எனவே அத்தொகுதியின் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இளங்கோவன் அவர்கள் மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கின் சட்டமன்ற உறுப்பினரானார்.

அந்த இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கேட்டு அதன் தலைவரான திரு. கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து இந்த இடைதேர்தலில் தனக்கு ஆதவளித்து பிரச்சாரம் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையடுத்து காங்கிரஸ் பேரியக்கத்தின் பேரிலும் பாராளுமன்ற உறுப்பினரும் தனது உற்ற நண்பருமான திரு.ராகுல்காந்தி அவர்களுக்காக பிரச்சாரம் செய்திட இசைந்தார். குறிப்பாக சொல்லப்போனால் 2022 ஆண்டில் இந்திய தேச ஒற்றுமைக்காக ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் நாடு முழுவதும் பெரும் எழுச்சியுடன் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு புத்தில்லியில் அதன் நிறைவுப்பகுதியில் கூட்டணி தலைவர்கள் வீற்றிருக்கும் பிரம்மாண்ட மேடையில் திரு.கமல்ஹாசன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இவற்றையெல்லாம் தம் மனதில் இருத்திக் கொண்டதோடல்லாமல் நீண்ட பாரம்பரியம் மிக்க தந்தை பெரியார் அவர்களின் குடும்பத்தின் வழித்தோன்றலான பேரன் திரு.EVKS. இளங்கோவன் அவர்களின் மீதுள்ள பிரியத்தால் 2023 இல் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற இடைதேர்தலில் அவரை எந்த நிபந்தனையுமில்லாமல் ஆதரித்து சிறப்பான பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழக அரசியலில் ஓர் ஒப்பற்ற தலைவராக விளங்கிய திரு.இளங்கோவன் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து பெரும் வேதனையுடன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு.EVKS. இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் புகழஞ்சலி.

“என் அருமை நண்பர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் என்ற செய்தி மனதைத் தாக்குகிறது.

பெரும் பாரம்பரியமுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் தூணாக இருந்தவர் சாய்ந்துவிட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், என்பவை இருக்க, அவர் பெரியாரின் பேரன் என்பதே எங்கள் அன்பின் நெருக்கத்துக்குப் போதுமானதாக இருந்தது. வயதைப் பொருட்படுத்தாமல் தான் ஈடுபட்ட பணிகளில் அயராது செயல்பட்டவர் அன்பு நண்பர் இளங்கோவன் அவர்கள். சட்டமன்ற விவாதங்கள் ஆனாலும் சரி, கட்சி அரசியல் கூட்டங்களானாலும் சரி, களைப்பும் தளர்ச்சியும் இல்லாமல் முழு மூச்சோடு செயல்பட்டவர். தகைமையுடைய தலைவரை இழந்து அதிர்ந்து நின்றிருக்கும் காங்கிரஸ் அன்பர்களுக்கும், ஆலமரமாகத் தங்களைக் காத்து வந்த மூத்தவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆறுதல்களை உளப்பூர்வமாகத் தெரிவிக்க விழைகிறேன்.

‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ என்ற வள்ளுவ வாசகமே நெஞ்சில் மோதுகிறது.திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைதேர்தலில் தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென திரு.இளங்கோவன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களை ம.நீ.ம தலைமை அலுவகத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்டது.

மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவரான திரு.EVKS இளங்கோவன் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவரது அமர உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர்கள்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்