பூமி என்பது யாரோ ஒருவருக்கானது அல்ல, இயற்கையின் கொடை தனிநபரை துதி போற்றுவதும் இல்லை.
காலச்சுழற்ச்சி என்பது பருவநிலை மாற்றம் கூட, அதற்கு இயற்கையுடன் இயைந்த வாழ்வே சிறந்தது என்பது மட்டுமே நிதர்சனம். பணம் பொருள் மண்ணுக்கு பேராசை கொண்டு என்றைக்கு இயற்கையை நாம் ஆக்கிரமித்து அதன் போக்கை சிதைக்கிறோமோ அன்றே அது போடும் கணக்கு வாழும் தலைமுறையினை மட்டுமல்ல இனி வரவிருக்கும் தலைமுறையை கூட அமைதியாக வாழ இயலாமல் செய்து விடும் சக்தி அதற்கு உண்டு என்பதற்கு சாட்சியாய் 2004 இல் உலகையே புரட்டி எடுத்து தனக்குள் மூழ்கடித்த சுனாமி மறக்க முடியாத சுவடுகளை தந்து விட்டுச் சென்றது.
எனினும் அவற்றை சற்றும் மனதில் நிறுத்தாமல் நிலை கொள்ளாமல் தான் வளரவும் தன் குடும்பம் வளரவும் பூவுலகில் வாழும் எதற்கும் யாருக்காகவும் சற்றும் மனசாட்சி ஏதும் இல்லாமல் இயற்கையை சுரண்டி சுரண்டி எடுத்து கோடிக்கணக்கான கரன்சிக்களை கஜானாவில் நிரப்பிக்கொண்டு இருக்கின்றனர் கல்வித் தந்தைகளாகவும் ஆன்மிக மனிதர்களாகவும் மக்களின் நலனை காக்க வந்த ஆபத்பாந்தவர்கள் எனும் அரசியல்வாதிகள் எனும் பணம் தின்னும் பேய்கள்.
கனிம வளங்கள் ஏராளம் உண்டு மலைகளும், மணல் படுகைகளும் பலவித கனிமங்கள் உள்ள பெரும் வளங்களும் உண்டு அவற்றை பெரும் ராட்சத கரங்கள் கொண்ட இயந்திரங்கள் உதவியுடன் அசுர வேகத்தில் சூறையாடி வருகின்றனர் பெரும் பண முதலைகள்.
சுமார் அரை நூற்றாண்டு முன்னர் கண்ட தமிழகம் இன்றைக்கு முற்றிலும் வேறாக மாறிப் போய் உள்ளது இனிவரும் காலங்களில் மீதமிருக்கும் தமிழகமும் அதன் இயற்கை கனிம வளங்களும் காணாமல் போய்விடும் என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஜனநாயக முறையை கொன்று புதைத்து என்றைக்கு ஒவ்வொரு ஓட்டையும் விலை பேசி வாங்கினார்களோ அன்றைக்கு இருந்து கேட்பார் யாருமின்றி கொள்ளைபோகிறது இயற்கை வளங்கள். ஆயிரக்கணக்கில் என்பதெல்லாம் போய் கோடிக்கணக்கில் அனாவசியமாக கை மாறுகிறது கரன்சிகள்.
தமிழ்நாட்டில் கிரானைட் எடுப்பதற்காக மலைகளைக் குடையும் குவாரிகள் 86 உள்ளன!
ஹெவிமெட்டல்ஸ் என அணு கனிமங்களை எடுக்கும் குவாரிகள் 81 உள்ளன!
பெருங்கனிமங்களை அள்ளும் குவாரிகள் 421 உள்ளன!
குரூட் ஆயில், எரிவாயு எடுப்பதற்கான குவாரிகள் 25 உள்ளன!
மணல் அள்ளும் குவாரிகள் மலைக்க வைக்கும் அளவுக்கு உள்ளன!
இவை தவிர சிறு கனிமங்கள், சிமெண்டிற்கான சுண்ணாம்புச் சுரங்கங்கள், நிலக்கரி சுரங்கம் என பலதரப்பட்ட குவாரிகள் உள்ளன!
ஆக மொத்தத்தில் எல்லாமுமாக சேர்த்தால் சுமார் 3,790 குவாரிகள் உள்ளன!
இவற்றில் பெருமளவு தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அவர்கள் அகண்ட புல்டோசர்கள் மூலம் சுரண்டி எடுத்து வைத்துக்கொண்டு மேஜைகரண்டி அளவிற்கு அரசுக்கு விலையாக தருகிறார்கள். இதற்கு உறுதுணையாக துறைசார்ந்த அதிகாரிகள் துணையும் உண்டு அந்தந்த மாவட்ட அரசியல் பிரமுகர்களின் ஆதரவும் உண்டு.
இத்தகைய இயற்கையை சுரண்டும் செயல்களை பெரும் போராட்டத்தின் மூலம் சட்டத்தின் முன் நிறுத்திய திரு சகாயம் ஐ எ எஸ் அவர்களின் நோக்கத்தையும் கலைத்ததில் பெரும்பங்கு களவாடும் அரசியல்வாதிகளுக்கும் கண்களை மறைத்துக்கொண்டு களவுக்கு துணை போன கழகங்களுக்கும் உண்டு. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்தவித தங்கு தடையின்றி கனிமங்கள் கொள்ளை தினமும் நடந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு ஓங்கி உயர்ந்த மலைகளும் தண்ணீர் பட்டு கரைந்த களிமண் போன்று தரை மட்டத்திற்கு கீழே இருப்பதே சாட்சி.
இயற்கையை வெல்வது சுலபமல்ல இன்றைக்கு கபளீகரம் செய்யும் கரங்கள் நாளை எதைத் தின்பீர்கள் மண்ணில் விலையும் அரிசியையா அல்லது வெளியேறும் உங்களின் கழிவுகளையா ? நீங்கள் உருவாக்கியதை வேண்டுமானால் அழித்துக் கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு பொதுவில் இருக்கும் இயற்கையை அழிப்பது நீங்கள் தாயினடத்தில் பால் குடித்த முலைகளை அறுப்பது போன்றது.
https://kamadenu.hindutamil.in/regional/when-is-the-end-to-mineral-plunder






