சென்னை : ஏப்ரல் 26, 2023
தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்களுக்கு 85 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார்.
இன்று 85ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழின் மகத்தான படைப்பாளி நீல.பத்மநாபன் அவர்களை மனதார வாழ்த்துகிறேன். தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம், உறவுகள் என அழியாப் புகழ்மிக்க நாவல்களைத் தமிழுக்குத் தந்த நீல.பத்மநாபன், யதார்த்தவாத அழகியலின் முன்னத்தி ஏர். தனது மண்ணையும் மனிதர்களையும் உயிர்ப்புள்ள கதாபாத்திரங்களாக உலவச் செய்த நீல.பத்மநாபன்தான் மக்களின் புழங்கு மொழியை இலக்கியத்தில் வெற்றிகரமாகத் தொடங்கி வைத்தவர். நான் அவரது வாசகன். அவரது வீட்டிற்குச் சென்று பேட்டி கண்டிருக்கிறேன். லண்டன் குண்டு வெடிப்பு பற்றி நான் எழுதிய தமிழ்க் கவிதையை நீல.பத்மநாபன் மலையாளத்தில் மொழிபெயர்த்ததை ஆகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கி வரும் தன்னிகரற்ற தமிழ்ப் படைப்பாளி நீல.பத்மநாபன் நீண்ட ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவேண்டுமென வாழ்த்துகிறேன். அவரது மகத்தான படைப்புகளைத் தமிழர்கள் வாசிக்கவேண்டுமெனப் பரிந்துரைக்கிறேன். – கமல்ஹாசன்
