சென்னை – நவம்பர் 15, 2௦22
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை! நரகமாக மாறுகிறதா அரசு மருத்துவமனைகள்? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம். மாநில செயலாளர் திரு சிவா இளங்கோ அறிக்கை



வலியோர் யாரோ எவரோ என எதுவாக இருப்பினும் அவர்களின் வசதியான பின்புலத்தில் இருந்து பிறப்பு முதல் வளர்ப்பு, கல்வி, விளையாட்டு அதன் ஊடாக நகரும் எந்த சிக்கலும் இல்லாத வாழ்க்கை. உதாரணமாக பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் திறமையிருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் பின்புலத்தில் அவர்களின் பணபலம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி கொண்டு செல்லும். ஆனால் இதில் திறமை மட்டுமே வைத்துக்கொண்டு ஜெயிக்க உத்வேகம் கொள்ளும் வசதியானவர்கள் வெகு சிலரே இருக்கக்கூடும்.
வடசென்னை பகுதியான வியாசர்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கால்பந்து விளையாட்டு பிரசித்திபெற்ற ஒன்று. இங்கே வசிக்கும் பலரும் இவ்விளையாட்டின் மீது பெரும் காதலே கொண்டிருக்கும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். தாம் விளையாடிய காலங்களை நினைவில் வைத்து தொடர்ந்து பயிற்சி செய்தும் அல்லது தொடரமுடியாமல் ஜெயிக்க முடியாமற் போனாலும் நமது பிள்ளைகள் மூலமாவது அந்த இலக்கை எட்டிவிடவேண்டும் என்ற கனவினை அதன் தீவிரம் குறையாமல் உள்ளுக்குள் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் தீயினைப் போல் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.
அதன்படியே பலரும் தமது குழந்தைகளை தகுந்த கால்பந்தாட்ட பயிற்சியாளரை கொண்டு ஆட்டத்தின் நுணுக்கங்கள் கற்றுக்கொள்ள செய்வார்கள். அப்படி கடுமையான பயிற்சி பெற்றவர்கள் பலர் போட்டிகளில் ஆடி பெருமையும் சேர்த்த தரவுகளும் உண்டு. வடசென்னை என்றாலே முகம் சுளிக்கும் போக்கினை பல காலங்களுக்கு முன்னே இது போன்ற திறம் கொண்ட வீரர்களால் தகர்க்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு.
ஆட்சி செய்யும் கோட்டை, பிரம்மாண்ட வணிக வளாகங்கள், ப்ளெக்ஸ் தியேட்டர்கள், அலங்கார விளக்குகள் ஒளிரும் பெரும் கட்டிடங்கள் நிறைந்திருக்கும், தென்சென்னை, மத்திய சென்னை என வளர்ந்த பகுதிகள் தவிர்த்து வடசென்னை பகுதிகள் எல்லாமும் ஒதுக்கப்பட்டவை போன்றே காட்சியளிக்கும். அதில் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் அபார்ட்மென்ட்கள் இருக்கும். நீங்கள் வேறு இடத்தில இருந்து வடசென்னை நோக்கி பயணம் செய்ய ஆட்டோக்களை தேடினால் வரத் தயங்குவார்கள், அப்படி ஒதுக்கிவைக்கப்பட்ட இன்னுமோர் நகரத்தில் இருந்து விளையாட்டின் மூலம் பரிணமித்து வெற்றி பெறுவதே பெரும் பிரயத்தனம் செய்வதாகும்.
அப்படிப்பட்ட ஓர் சூழலில் தங்களை எப்படியாவது இந்த உலகம் ஒரு முறையாவது திரும்பி பார்த்து புன்னகை செய்யாதா என ஏக்கத்துடன் வளரும் பருவத்தினர் மத்தியில் 17 வயதே நிரம்பிய பெண் பிள்ளை தான் பிரியா. கால்பந்தாட்டம் தன்னை மெருகேற்றி வெற்றிகளை அள்ளித்தரும் என்ற கனவில் சிறு வயது முதலே கால்பந்தில் அதிக நாட்டம் கொண்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வளர்ந்தவர் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்தவர்.
சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் அங்கும் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
தொடர்ச்சியாக பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வந்தவர் எதிர்பாராவிதமாக ஓர் நாள் பயிற்சியின் பொது காலில் தசைப்பிடிப்பு உண்டானது. அதனால் மூட்டில் வலி உண்டாகவே அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யவே அங்கே எடுக்கப்பட்ட பரிசோதனையில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி கொளத்தூர் அருகில் உள்ள பெரியார்நகர் அரசு புறநகர் மருத்துவமனையை நாடியிருக்கிறார். அங்கே அவருக்கு சிகிச்சையளித்து வந்தநிலையில் அங்கே பணியில் இருந்த மருத்துவர்கள் தசைப்பிடிப்புக்கான அறுவை சிகிச்சையும் செய்தனர். எனினும் அவருடைய வலி கொஞ்சமும் குறையவில்லை, இதனால் மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜிவ்காந்தி பன்னோக்கு மருத்துவமனியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
அங்கே தொடர்ச்சியான பரிசோதனைகளில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர் ப்ரியாவின் காலில் தசைகள் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது கண்ட மருத்துவர்கள் வேறு வழியின்றி அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு சேதமடைந்த காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். அதன் பின்னர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவரது உடல்நிலையில் தொய்வு ஏற்படவே எதிர்பாராமல் தொடர்ந்து அளித்த சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் அந்த மருத்துவமனை வளாகமே முழுதும் பரபரப்பானது, அதனைத் தொடர்ந்து அங்கே பெரும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பலதரப்பில் வரும் பேச்சுக்கள் பலவிதமாக இருக்கின்றன சிலர் பெரியார் நகர் மருத்துவமனையில் மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் கட்டு கட்டப்பட்ட இடம் மிகவும் அழுத்தமாக இருந்ததால் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தடைபட்டதால் கால் அழுகக்கூடிய நிலைமைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சையளித்த மருத்துவர்களின் கவனக் குறைவினால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்றும் அரசு தரப்பிலான சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னதாக செய்திகளில் வெளியானது எனவும் சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்களை உடனடியாக சஸ்பென்ட் செய்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
எது எப்படியாக இருந்தாலும் மருத்துவர்கள் என்பவர்கள் மிக உயர்ந்த இடத்தில உள்ளவர்கள் கிட்டத்தட்ட உயிர் தரும் படைப்பாளிகள் எனவும் சொல்லலாம். எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகளை கூட சிறந்த சிகிச்சைகளினால் எழுந்து நடமாட வைத்துவிடவும் கூடிய வல்லமை உடையவர்கள். அவர்களில் வெகு சிலர் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு அவர்களுக்குரிய கண்ணியத்தை இழந்துவிடுகிறார்கள்.
இந்த சம்பவத்தினால் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டுள்ள ப்ரியாவின் பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலில் ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது ஏது நடந்தது என எதுவும் புரியாமல் பரிதவித்துப் போயுள்ளனர். அரசு இந்த சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கலைக் கண்டுணர்ந்து தெளிவான விசாரணையை மேற்கொண்டு பொதுமக்களுக்கும் இறந்த ப்ரியாவின் பெற்றோர்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் வகையில் மிகத்துரிதமாக செயல்படவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இலக்கை நோக்கிய கனவுகள் நாளைய நிஜ உலகில் உங்களை உயரத்தில் கொண்டு நிற்க வைக்கும் என்பது ப்ரியாவை பொறுத்தவரை வெறும் கனவாகவே கலைந்து போனது.
மக்கள் நீதி மய்யம் & மய்யதமிழர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது.





