பெரம்பூர் : நவம்பர் 21, 2௦22

சென்னை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இணைப்பகமும், தபால், தந்தி அலுவலர்கள் குடியிருப்பும் அமைந்துள்ள பிரதான சாலை கடந்த ஓராண்டு காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் காடு போல் புதர் மண்டியும், குப்பைக் கிடங்காகவும், சாக்கடை குட்டையாகவும் மாறி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று மையமாக திகழ்வதோடு, அந்த பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாகவும் விளங்கி வருகிறது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆளுங்கட்சியினரோ, பிரதான எதிர்க்கட்சியோ இப்பகுதியை கண்டு கொள்ளாமல் விட்ட நிலையில், ம.நீ.ம துணைத் தலைவர் திருA.G மௌரியா அவர்கள் தலைமையில், நற்பணி இயக்க அணி மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டனர்.

நோய்களின் தாக்கத்தை ஏற்படுத்தும் இப்பகுதியை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக இந்த சுகாதார சீர்கேடுகளை சரி செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் கோரிக்கை விடுத்தார்.

இந்த சுகாதார சீர்கேடுகள் விரைவில் சரி செய்யப்படவில்லை எனில் BSNL நிறுவனத்தையும், சென்னை மாநகராட்சியை கண்டித்தும் மக்கள் நீதி மய்யம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று துணைத் தலைவர் தெரிவித்தார்.