பிப்ரவரி 19, 2022
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்யாமல் இத்தனை மாதங்களை கடத்திவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டி துளியும் மனசாட்சி இல்லாமல் ஒவ்வொரு வார்டுகளிலும் தங்கள் இருப்பைத் தக்க வைக்க நேர்வழியில் செல்லாமல் (இதுவரை இவர்கள் என்ன நேர்வழியில் சென்றார்களா என்றெல்லாம் கேட்கக்கூடாது அவர்களுக்கு நேர்வழி என்பதெல்லாம் ஊழலுக்கு அடிகோலும் வழியும் பின்னர் அந்த ஊழலை திறம்படச் செய்து முடிக்கும் வழியும் மட்டுமே) தேர்வு செய்த ஒரே வழி பணம் பொருள் நகை அண்டா குண்டா என ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது.
இதில் சிண்டிகேட் போட்டு பணம் பட்டுவாடா செய்தது உச்சம். வங்கிகளில் பணம் எடுக்க டோக்கன் சிஸ்டம் போல ஓரிடத்தில் சீட்டைக் கொடுத்து அதை வேறிடத்தில் தந்து பணம் பெற்றுக்கொள்வது, கூகிள் பே, சில்வர் பாத்திரங்கள், கால் கொலுசு (அதிலும் தரமற்ற போலி கொலுசு கொடுத்த கதையும் உண்டு) என வரிசையாய் பல வகைகளில் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ளூர் கட்சி நபர்கள் மூலம் தரப்பட்டது.



இதற்கு அடுத்த நகர்வாய் பிப்ரவரி 19 அன்று தமிழகமெங்கும் ஒரே கட்டமாக துவங்கியது உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சற்று மந்தமாக நடந்துகொண்டிருந்த வாக்குப்பதிவு ஓரளவிற்கு பதிவாகி வந்தது, மாலை 4.45 மணியளவில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சலசலப்பு துவங்கியது வாக்குச் செலுத்த அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே பெரும்பாலான வாக்குச்சாவடிகள் பிரதான நுழைவு கதவுகள் மூடப்பட்டன. அதற்கான காரணமாக சொல்லப்பட்டது கொரொனோ தொற்று பாதித்தவர்கள் வாக்களிக்க மாலை 5 மணி முதல் 6 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அங்கே தான் ஆரம்பம் ஆனது ஆளுங்கட்சியின் அராஜக போக்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய திமுக வினர் அங்கே இருந்த காவலர்களை ஏவலர்கள் போல சற்றும் அவர்களை பொருட்டாக மதிக்காமல் முறையற்று தங்கள் கைக்கூலிகளை வைத்து கள்ள ஓட்டுக்களை செலுத்தினார்கள். மேலும் திமுகவின் அராஜகத்தினை எதிர்த்து கேள்வி எழுப்பிய நேர்மை பணி செய்யும் காவலர்கள் கேட்டபோது அவரை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தது இவைகளை தனது செல்போனில் படமெடுத்த பெண் காவலரின் செல்போனை பிடுங்கியது என அவர்களின் கட்டுக்கடங்காத அதிகார வெறி என்றால் மிகையாகாது.

அதை எதிர்த்துக் கேட்ட மக்கள் நீதி மய்யத்தினர் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர். உதாரணமாகசென்னை மாநகராட்சி வார்டு எண் 173 இல் மாலை 5.30 மணியளவில் ஸ்ரீதேவி எனும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர், நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னர் மூடப்பட்டிருந்த பிரதான கதவுகள் திறக்கப்பட்டு அனுமதிக்கபட்டனர் அதற்குள்ளாக சுமார் 100 மேற்பட்ட கோவிட் தொற்று வாக்காளர்கள் வக்களிக்கபட்டதாக தகவல்கள் இருந்தன. அப்படியெனில் 1 மணி நேரத்திற்குள்ளாக அத்தனை அளவில் கோவிட் தொற்றுள்ளவர்கள் தங்கள் வாக்குகள் செலுத்தினார்கள் எனில் 19.02.2022 அன்று சென்னையின் மொத்த கோவிட் தொற்று எண்ணிக்கை எவ்வளவு ?
மேற்சொன்ன வார்டு பற்றிய தகவல்கள் ஒன்று இரண்டு தான் ஆனால் ஆக்கிரமிக்கப்பட்ட வார்டு எத்தனை என்று வெளிவராத உண்மை நிலவரம் நிறைய இருக்கக்கூடும்.
ஆட்சியில் அமர்ந்து 50 வது நாள் 75 ஆவது நாள் 100 வது நாள் என சினிமா பட பாணியில் நாளிதழ்களில் பிரம்மாண்டமாக விளம்பரங்கள் கொடுப்பதை செய்ய மறக்காத இவர்கள் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்துவிட்டு ஊழல் செய்து கொள்ளையடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு பின்னர் இது போல் நடக்கும் இடைதேர்தல் உள்ளாட்சித் தேர்தல்களில் முறைகேடாக பணம் பொருட்களை வழங்கியும் கள்ள ஓட்டுக்கள் பதிவிட்டும் தங்கள் வெற்றியை பெறுகிறார்கள் எனில் இதில் கொல்லப்படுவது ஜனநாயகம் மட்டுமல்ல நாளைய இளம் சமுதாயம் குழந்தைகளின் கையூட்டு அல்லாத நேர்மையான அரசாட்சியும் தான்.




இதில் இன்னொரு கூத்தும் நடந்தது, பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பது நல்ல விஷயதிற்கு சொல்லலாம் ஆனால் இதை அப்படி ஒப்பிடக்கூடாது. மாநிலக் கட்சியுடன் கூட்டணி போடும் கம்யூநிஸ்ட் கட்சியும் பணப்பட்டுவாடா செய்தது தெரியவந்துள்ளது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த இச்செயலை கண்டித்த போலீசார் வேட்பாளரை எச்சரித்து அனுப்பினர்.
