டிசம்பர் 28, 2024
தமிழ்த் திரையுலகின் கதாநாயகனாக கோலோச்சிய திரு.விஜயகாந்த் அவர்கள் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையில் தோன்றுகையில் ஈகை குணம் கொண்டவராக, தேசப்பற்றுள்ள ஓர் குடிமகனாக, இராணுவம் மற்றும் காவலர் என எந்த வேடங்கள் புனைந்து நடித்தாலும் பாத்திரமாக மட்டுமல்ல இயல்பாகவே அதே நல்லெண்ணமும், உதவும் குணமும் ஒருசேர கொண்டவர். நிஜத்திலும் நிறைய நபர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளார் என்பதற்கு அவரைப் போற்றும் அன்பர்கள் சொல்வார்கள்.
ஈகை குணம், தன்னை நாடி வருபவர்களின் வயிற்றுப் பசி போக்குவதில் குறையாத மனம் கொண்டவர். தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் கடைக்கோடி ஊழியர் முதல் கதாநாயகன் வரை ஒரே மாதிரியான உணவுகள் பரிமாற வேண்டும் என்றும் கட்டளையிட்டவர். நடிகர்சங்க தலைவராக பதவி வகித்த காலங்களில் இவரால் பல சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்டது என்றும் தகவல்கள் உள்ளது. பின்னர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் அரசியல் கட்சியை நிறுவி தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். அதற்கடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு எதிர்க்கட்சி தலைவராகவும் எதிர்கட்சியாகவும் அந்தஸ்து பெற்றார். காலப்போக்கில் உடல்நலம் பாதிப்படைந்து நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஆலோசனைகள் வழங்கியும் வியூகங்கள் வகுத்தும் தலைவராக தொடர்ந்தார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும் நாளடைவில் உடல்நலம் மேலும் பாதிப்படைந்து சிகிச்சைகள் பலனின்றி கடந்த ஆண்டு அதாவது 28.12.2023 அன்று இயற்கை எய்தினார்.
திரையில் ஒருசில படங்களில் இணைந்து நடித்ததும் நடிகர் சங்க தலைவராக நீடித்தபோதும் சக கலைஞரான திரு. விஜயகாந்த் அவர்களுடன் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் அளவுகடந்த அன்பும் நட்பும் கொண்டிருந்தார். உற்ற நண்பரின் மறைவைக் கேட்டதும் உளம் வெதும்பி சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக கேப்டன் உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்துவிட்டு அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இரண்டு மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரிடம் தமது வருத்தங்களை தெரிவித்து மன தைரியம் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
கேப்டன் அவர்கள் மறைந்து ஓராண்டு ஆகிறது. அதனை குறிப்பிட்டு இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பதிவிட்டுள்ளார்.
அன்பு நண்பர்,
தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன்.
வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
சென்னை கோயம்பேடு தே.மு.தி.க தலைமை நிலையத்தில் நடைபெற்ற கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்விற்கு (குருபூஜை) அழைப்பிதழ் பெற்றதையடுத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம், மாநில செயலாளர்கள் திரு.செந்தில் ஆறுமுகம் (தலைமை அலுவலக நிர்வாகம்), திரு.முரளி அப்பாஸ் (ஊடகம் & செய்தித் தொடர்பு), திரு.ராகேஷ் ராஜசேகரன் (மாணவரணி), திரு.லஷ்மண் (சமூக ஊடகம்), மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி.சினேகா மோகன்தாஸ், மாவட்ட செயலாளர்கள் திரு.சண்முக சுந்தரம், திரு.சைதை கதிர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டு கேப்டனின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கடந்த ஆண்டு, தே.மு.தி.க நிறுவனத் தலைவர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு குறித்து நமது மய்யத்தமிழர்கள்.com இல் வெளியான பதிவு.
நன்றி : மக்கள் நீதி மய்யம், செய்தித்தாள் & செய்தி சேனல் சமூக ஊடகங்கள்