டிசம்பர் 28, 2023

தமிழ்த்திரையுலகில் 1979 இல் அகல்விளக்கு எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக விஜயகாந்த் அவர்கள் இதுவரை 154 படங்கள் வரை நடித்துள்ளார். மிக முக்கியமான சாதனையாக இவர் தமிழை தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தான் நடித்த கதாபாத்திரங்களில் போராட்ட குணமுடையவராகவும் எளியவர்களுக்கு உதவிடும் மனிதராக திரையில் தோன்றியிருந்தாலும் நிஜத்திலும் அவ்வாறே எளியவர்கள் உதவி என்று அவரை கேட்கையில் என்ன வேண்டுமோ அவற்றை செய்துதருவார், அதுமட்டுமல்லாமல் தனது படங்களில் நடைபெறும் படப்பிடிப்புகளில் உணவு இடைவேளையின் போது அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுவகைகள் தரமானதாகவும் எவருக்கும் போதாமல் பற்றாக்குறையாக இருந்துவிடாமல் அவர்களின் வயிறு நிறைய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் என்பதும் திரையுலகில் உண்மை. அதுமட்டுமல்லாமல் தன்னைக் காணவரும் ரசிகர்கள் கட்சி துவங்கியபின்னர் தொண்டர்கள் என எவர் வந்தாலும் கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் எந்த நேரமும் அவர்களுக்கு உணவு கிடைக்கபெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக பசியாறியவர்கள் புகழ்ந்து செல்வார்கள்.

திரைக்கலைஞராக பரிணமித்த திரு.விஜயகாந்த் அவர்கள் தமிழ்நாடு நடிகர்கள் சங்கத்தின் தலைவராக பதவியும் வகித்தார். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை துவக்கி அதன் நிறுவன தலைவராக கடந்த 2006 ஆண்டு விருத்தாசலம் தொகுதி MLA மற்றும் 2011 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித்தலைவராக இயங்கினார். இயற்பெயர் மட்டுமல்லாது அவரது பெயராக கேப்டன் என்பதே அவருக்கு மிக முக்கிய அடையாளமாக மாறிப்போனது என்றால் மிகையாகாது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கட்சி துவங்கும்போது திரு.விஜயகாந்த் அவர்களை நேரில் சென்று சந்தித்து அரசியல் களம் குறித்து உரையாடினார்கள்.

மிகச்சிறந்த ஓர் மனிதராக மனிதநேய பண்பாளராக விளங்கிய திரு.விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலை இயற்கை எய்தினார். அவரது புகழ் வாழ்வு குறித்து திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்திலும் கட்சியின் சார்பிலும் இரங்கல்கள் தெரிவித்துள்ளார்.

“எனது அன்பிற்கினிய சகோதரர், தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர், கேப்டன் என்று அனைவராலும் அன்பு பாராட்டப்பட்ட விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது. தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது. சினிமா, அரசியல் இரண்டு தளங்களிலுமே தடம் பதித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நம் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தார், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

#Vijaykanth #Vijayakanth