ஜனவரி 19, 2024

தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகனாகவே பல திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று பல உச்சங்களைத் தொட்டார். சொல்லப்போனால் தமிழ் மொழியை தவிர வேற்று மொழிகளில் திரைப்படங்கள் எதையும் அவர் நடிக்கவில்லை. அவர் திரைத்துறையில் வளர்ந்து வரும் போதே நிறைய எளிய மனிதர்களுக்கு பல வகைகளில் உதவிகள் செய்திருக்கிறார் என அவரைப்பற்றி அறிந்தவர்களும் அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் பலரும் மேடைகளில் மற்றும் பல ஊடகங்களில் பேசி இருக்கிறார்கள், தவிர தாம் நடிக்கும் படப்பிடிப்புகளில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என்பதும் அவருடைய வாய்மொழி உத்தரவு என்றே சொல்லலாம், ஒருவேளை அதில் ஏதேனும் சுணக்கம் பொருளாதார ரீதியாக தடைபடக் கூடாது என்பதால் உணவு உபசரிப்புக்கான செலவினங்கள் எவ்வளவு இருந்தாலும் தனது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளுமாறு சம்பந்தப்பட்ட படத்தயாரிப்பாளரிடம் சொல்லி விடுவாராம். அது போக திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வரும் பல இயக்குனர்களுக்கு தனது படங்களை இயக்க வைத்து அவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ள பெருமையும் திரு.விஜயகாந்த் அவர்களுக்கே சேரும்.

திரையுலகில் கதாநாயகர்கள் நிறம் குறித்த பெரிய சர்ச்சை நிலவும், ஆனால் அதையும் தகர்க்கச் செய்து முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் இடம்பிடித்து பின்னர் தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்வாகி அவர் பதவியில் இருந்தபோது மிகச்சிறப்பான முறையில் சங்கத்தை வழிநடத்தி நின்றார். நடிகர் சங்கம் கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்த காலத்தில் தமிழ்த்திரையுலகில் உள்ள அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்து சிங்கப்பூர், மலேசியா போன்ற அயல்நாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் திரட்டிய நிதியைக் கொண்டு சங்கத்தின் கடனை அடைக்க வழி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகாலத்தில் திரு.விஜயகாந்த் அவர்கள் நடிக்கும்போது நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களும் திரைப்படங்கள் வாயிலாக முன்னணியில் இருந்தார். அப்போது கதையம்சம் கொண்டதால் திரு.விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து முறையே இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேடங்களில் நம்மவர், விஜயகாந்த் அவர்களும் மனக்கணக்கு எனும் திரைப்படத்தில் நடித்தனர். அதன்பிறகும் நம்மவர் விஜயகாந்த் அவர்களுடன் நட்பு பாராட்டிக்கொண்டிருந்தார். 2005 இல் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் கட்சியை தொடங்கிய போதும் முதன்முறையாக விருத்தாசலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டதும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

சந்தர்ப்ப சூழல்களால் திரு.கமல்ஹாசன் அவர்களும் 2018 இல் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவைக்கும்போது மற்றும் துவக்கிய பின்னரும் திரு.விஜயகாந்த் அவர்களை நேரில் சென்று சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து உரையாடினார்.

கடந்த 2023 ஆண்டு டிசம்பர் 28 ஆம் பிரபல நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார், நம்மவர் தலைவர் அவர்கள் நேரில் சென்று விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மனைவி திருமதி.பிரேமலதா மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் அவர்களிடமும் ஆறுதல் தெரிவித்தார். அதற்கு பின்னர் இன்று தென்னிந்தியா திரைப்பட நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு சென்ற நம்மவர் அவர்கள் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களைப்பற்றி பல நினைவுகளை அங்கிருந்தவர்களிடையே பகிர்ந்து கொண்டவர், மேலும் தொடர்ந்து பேசியவர் “திரையுலகில் முன்னணி நாயகனாக வெற்றி பெற்றவர் அரசியலில் இறங்கியதும் அசராமல் விமர்சினங்களை முன்வைத்தது என அவரது மன தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பேசிய தலைவர் அவர்கள் மேலும் பல நிகழ்வுகளில் திரு.விஜயகாந்த் அவர்கள் தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைக்கும் போது அவரது துணிச்சல் அசாத்தியமானது, சமூகத்தின் மீதும் மக்களின் அக்கறை கொண்டவர் மட்டுமே இது போன்று பேச முடியும், அதனால் என்னவோ அவரது நியாயமான கோபம் எனக்கு மிகவும் பிடித்துப் போனது” என்றார்.