சென்னை : ஜனவரி 26, 2024

தமிழ்த்திரையுலகில் பல ஆண்டுகளாக தன் இசையால் அசையாத சாம்ராஜ்யம் அமைத்து பெரும் புகழ் கொண்டவர் இசைஞானி இளையராஜா. அவருக்கு முறையே கார்த்திக் ராஜா, பவதாரிணி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா என இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளான பவதாரிணி அவர்கள் உடல்நலகுறைவால் இன்று இயற்கை எய்தினார். 47 வயதே ஆன பவதாரிணி அவர்கள் தனது தந்தை, அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் இசையமைத்த படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் இசைஞானியின் இசையில் “பாரதி” எனும் படத்தில் “இடம்பெற்ற மயில்போல பொண்ணு ஒன்னு, குயில்போல பாட்டு ஒன்னு” எனும் பாடல் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்றாகும், தேசிய விருதும் பெற்றுத் தந்தது. தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டுமல்லாது தமிழின் பல முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார். பாடகியாக மட்டுமல்லாமல் 2002 இல் தொடங்கி 2019 வரை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பத்து படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உடல்நலகுறைவு காரணமாக இலங்கையில் உள்ள கொழும்புவில் சிகிச்சை பெற்று வந்தவர் எதிர்பாராத நிலையில் நேற்று (ஜனவரி 25) அன்று காலமானார்.

இசைஞானியின் நெருங்கிய நண்பரான திரு.கமல்ஹாசன் அவர்கள் பவதாரிணி இளம் வயதில் மரணமடைந்தது குறித்து பெரும் வேதனையுற்று தமது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்