சென்னை : மார்ச் 08, 2024

பெண் !

உலகமெங்கும் அவர்களின்றி அணுவும் அசையாது. ஓர் தலைமுறை வளர்ச்சியென்பது பெண் என்பவள் இல்லையெனில் சாத்தியமே இல்லை.

அடுக்களைக்கும், கணவனுக்கு பணிவிடையும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாகவும் பெண்களை எண்ணிய காலங்கள் எல்லாம் காடு மேடு மலைகள் கடந்து விண்ணேறி சென்று விட்டது எனலாம். பெண்கள் கால் பதிக்காத துறை என்று இன்றைக்கு எதுவுமில்லை. சோறு சமைக்கும் கரண்டியை பிடுங்கு புத்தகத்தை கொடு அவள் படித்து பட்டம் பெறுவாள் உன் வீடு வளர்ச்சியுறும் என்பது மெய்பிக்கப்பட்டுவிட்டது. அவள் சாதுவானவள், எதுவும் தெரியாது, ஊருலகம் புரியாது பொது விஷயங்கள் பரிச்சயமில்லை என்கிற ஒன்றுக்கும் உதவாத கருத்தெல்லாம் காலவாதியாகி விட்டது.

முட்கள் நிறைந்த வழியில் முதலில் நடக்கத் தொடங்கினால் அவருக்குப் பின் பலரும் நடக்க நடக்க அங்கே பாதை உருவாகிடும் என்பதாக குடும்பத்தில் பெண்ணொருவர் கல்வி கற்றுத் தேர்ச்சியுறத் தொடங்கினால் அடுத்து வரும் தலைமுறைகள் முன்னேறிச் சென்றுவிடும். நமது இந்தியாவில் பெண்களுக்கெதிரான கருத்துக்கள் எல்லாம் தவிடுபொடியாகி வருவதற்கு பலவும் சாட்சி.

மருத்துவம், இராணுவம், அறிவியல், விண்வெளி, கல்வி, அரசாட்சி, அரசு நிர்வாகம், கணினி மென்பொருள் துறை, வங்கி, பொருளாதாரம், சினிமா என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வரும் பல பெண் வல்லுனர்களை நமது நாடு கண்டு வருகிறது.

அப்படி சிறந்து விளங்கும் மகளிரை போற்றுவது நமது தலையாய கடமையாகும்.

உலக மகளிர் தினமான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நம்முடைய வாழ்வில் பெண்களின் பங்களிப்பும் தியாகமும் அளவீடற்றவை. அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என ஒவ்வொரு ஆணும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும். எதிலும் சளைக்காத பெண்ணினத்தை எல்லா விஷயங்களிலும் இணைத்துக்கொண்டு அனைத்திலும் சம உரிமை கிடைக்கச் செய்வோம். சாதிக்கத் துடிக்கும் பெண்கள் அனைவரையும் சர்வதேச மகளிர் தினத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்


#KamalHassan | #MNM | #WomensDay | #WomensDay2024 | #WomenEmpowerment | #InternationalWomensDay | #InternationalWomensDay2024 |

#KamalHaasan #MakkalNeedhiMaiam