மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், மின்சாரத் துறையானது தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொள்கின்றன. ஆனாலும், நஷ்டத்திலிருந்து மீட்டெடுத்து அதை நவீனப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தென்படவில்லை.

https://www.hindutamil.in/news/tamilnadu/724013-makkal-needhi-maiam-on-nuclear-power-plant.html

“வடசென்னையில் செயல்பட்டுவரும் இரு அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சூழலியல் சீரழிவால் இளவயது மரணங்கள் அதிகரிக்கும் என, ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

வடசென்னையில் வல்லூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் செயல்பட்டுவரும் அனல்மின் நிலையங்களால் அந்தப் பகுதிகளின் சூழலியல் சீரழிந்துவருவதாக, ‘சி40’ என்ற அமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது. உலக அளவில் பெருநகரங்களில் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்துவரும் அந்த அமைப்பு, ‘வடசென்னை பகுதியில் இதே நிலை தொடர்ந்தால், காற்று மாசுபாட்டால் இளவயது மரணங்கள் அதிகரிக்கும்’ என்றும், ‘இளவயதினர் அதிகம் பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என்றும், அறிக்கை மூலம் கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், கடலில் சாம்பல் புகை படிவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, எண்ணூர் பகுதி மீனவர்கள் குமுறுகின்றனர்.

நிலக்கரி, இயற்கை எரிவாயுவை எரிப்பதன் மூலம் இயங்கும் அனல்மின் நிலையங்கள் அதிகமான நச்சுக்காற்று மற்றும் சாம்பல் புகையை வெளியேற்றுகிறது. இதனால், சுற்றுச்சூழல் கெடுவதோடு, மனித உயிர்களுக்கு ஆபத்தும் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு, தமிழக அரசானது இவ்விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், மின்சாரத் துறையானது தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறிக்கொள்கின்றன. ஆனாலும், நஷ்டத்திலிருந்து மீட்டெடுத்து அதை நவீனப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தென்படவில்லை.

குறிப்பாக, அனல்மின் நிலைய பழைய உலைகளால் உற்பத்தியைவிட செலவுகளே கூடுவதாகச் சொல்கின்றன சில தகவல்கள். ஒருபக்கத்தில் சூழல் சீர்கேடு, மறுபக்கத்தில் தொடர் நஷ்டம்! இப்படி எல்லா வகையிலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள அனல்மின் நிலையங்களின் தொடர் செயல்பாட்டைத் தீவிர ஆய்வுக்கு உட்படுத்திச் சீரமைக்க வேண்டியது அவசரத் தேவையாகிறது.

வீடுகளுக்கும், விவசாயத்துக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்சாரம் என்பது அதிமுக்கியத் தேவை என்பதிலும், மின்சாரத் தட்டுப்பாடு என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுவிடும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இதனைக் கருத்தில் கொண்டு சூழலுக்கும், உயிர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில், மின்சார உற்பத்திக்கான வழிவகைகளை நாம் ஆராய வேண்டும்.

சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் புதிதாக அனல்மின் நிலையங்கள் தொடங்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடும் சூழலியல் ஆர்வலர்கள், தமிழகத்திலும் இதேபோன்றதொரு நிலைப்பாட்டை நாம் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

குறிப்பாக, கைவிடப்படும் பழைய அனல்மின் நிலையங்களைப் புதுப்பிப்பது போன்ற செயல்பாடுகளைத் தமிழக அரசு கண்டிப்பாக முன்னெடுக்கக் கூடாது என்ற அவர்களின் கோரிக்கை கவனத்துக்குரியது.

மாசற்ற உலகத்தைக் கையளித்துவிட்டுச் செல்வதைத் தவிர நாம் இப்புவிக்குச் செய்ய வேண்டிய கைம்மாறு வேறு ஒன்றுமில்லை. வளர்ச்சி என்பது இயற்கையைச் சீரழிப்பதாக இருந்துவிடக்கூடாது என்ற கருத்தாக்கத்தை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எதிர்காலத் தலைமுறையின் நலனைக் கருத்தில் கொண்டு, அனல்மின் நிலையங்களைப் படிப்படியாகக் கைவிடப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்துவதோடு; சூரிய ஆற்றல், காற்றாலை போன்ற மாசற்ற மின் உற்பத்தி முறைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழலும் வளம் பெறும். தமிழக அரசானது இந்த அதிமுக்கிய விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது”.

இவ்வாறு செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.