கட்டுரையாளர் : திரு.Cupid Buddha

அரசியலில் நடுநிலமை என்ற ஒன்றே கிடையாது – அண்ணன் டீக்கடையாரின் பதிவு.

அண்ணன் அவர்கள் கொள்கை சித்தாந்தங்களின் அடிப்படையில் இதைச் சொல்கிறார்.

மய்யம் என்பதிற்கான விளக்கத்தை அண்ணன் மூலமாக தமிழ்ச்சூழலுக்கு விளக்குவது என் கடமை என்று உணர்வதால் இப்பதிவு ! (டீக்கடை அண்ணனுக்கு தெரியாததில்லை).

ஒரு விளக்கத்திற்காக திமுக வினையும் மக்கள் நீதி மய்யம் கட்சியினையும் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

படிப்பவர்களுக்கு புரிவதற்காக !

திராவிடர் கழகத்திலிருந்து திமுக என்கின்ற அரசியல் அமைப்பு உருவான அன்றைய காலகட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சில அடிப்படைக் கோட்பாடுகளை உள்ளடக்கி சில செயற்பாட்டு வரைவுமுறைகளை திராவிட முன்னேற்றக்கட்சிக்கென்று உருவாக்குகின்றார்.

அது திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொள்கையாக மக்களிடையே வைக்கப்படுகின்றது.

அந்த கோட்பாடுகள் சிவப்பு என்கின்ற கம்யூனிச இயக்கச் சித்தாந்தங்களையும், கருப்பு என்கின்ற திராவிட இயக்கத்தின் சித்தாந்தங்களையும் உள்வாங்கிக்கொண்டு அதை ஜனரஞ்சமாகக் மக்களுக்குப் புரிகின்ற வகையில் உருவாக்குகின்றார்கள் அறிஞர் அண்ணவும், அவர் தம்பிகளும்.

அக்கொள்கைகள், உலகளாவிய அரசியல் சூழலில் இடதுசாரியக்கொள்கை என்று பொதுப்படுத்தப்பட்ட ஒரு மூலக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது, அது இடது சாரியக் கொள்கை கொண்ட இடது சாரிக் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் முன் பிராச்சாரப்படுத்தப்பட்டு அரசியல் அதிகாரத்தை கையகப்படுத்த வேண்டி வைக்கப்படுகிறது!

அதாவது, ஒரு கட்சி அமைப்பாக உருவாக்கம் கொள்வதற்கே “முன் முடிவுகளுடன்” இடது சாரிய அடிப்படைகளுடன் pre-determined, pre-decided கொள்கை முடிவுகளுடன் கட்சி துவங்கப்பெறுகிறது, அக்கட்சியின் உறுப்பினர்களும் அக்கொள்கையினை ஒத்தக் கருத்துடையவர்களாக, அக்கொள்கையின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, அக்கொள்கையின் மீது ஈர்ப்பு கொண்டு இழுக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

சமூக அரசியல் பண்பாட்டு கலாச்சார வணிகப் பொருளாதார கல்வி வளர்ச்சி என எல்லா தளங்களிலும் , முன் முடிவு எடுக்கப்பட்ட இடது சாரியக்கொள்கை சார்ந்து அக்கட்சியும் அக்கட்சியின் தலைமையும் அக்கட்சியின் உறுப்பினர்களும் அக்கட்சி சார்பாக அமையும் அரசும் கொள்கை முடிவுகளை எடுக்கும்.

இது திராவிட முன்னேற்றக்கட்சியின் அடிப்படை இயங்கும் தன்மை.

நிற்க !

இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வருவோம் !

திரு.கமல்ஹாசன் “மய்யம்” அதாவது Centrism – நடுவுநிலை என்கின்ற ஒரு தத்துவத்தை தமிழக இந்திய அரசியல் சூழலில் அறிமுகப்படுத்துகிறார்.

அந்த சிந்தனை, எதிலும் எதையும் முன் முடிவுடன் அணுகாமல், அது வலது சாரிய சார்புடனோ அல்லது இடது சாரிய சார்புடனோ தொடர்பு கொள்ளாது, நடுவு நிலையில் இருந்து அணுகி சீர்தூக்கி “மக்கள் நலன்” சார்ந்து முடிவெடுப்பது !

வலது சாரிக்கும் மக்கள் நலனே அடிப்படை, இடது சாரிக்கும் மக்கள் நலனே அடிப்படை, அரசியலுக்கே மக்கள் நலனே அடிப்படை என்கின்ற வாதம் மிகப்பிரசித்தம்!

மக்கள் நலன் என்பது மேற்சொன்ன “சமூக, அரசியல், கல்வி, வளர்ச்சி, பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு என்று பன்முகத்தன்மை கொண்டது !

பல அடுக்குகளைக் கொண்டது, அகமும் புறமும் சார்ந்து காலத்தால் மாறி, வளர்வு/ விரிவு நிலைகள் அடைந்து, பல பரிணாமங்களையும் பல பரிமாணங்களையும் எடுத்து மாறும் இயல்புத் தன்மை கொண்டது !

டெவலப்மெண்ட் (Development) என்கின்ற பெயரில் விவசாய நிலத்தில் இருந்து தங்க வைரமே கிடைத்தாலும் அதை வேண்டாம் என்று கூறும் தன்மை இடது சாரிய சார்பு நிலை கொண்டது.

அதற்காக வளர்ச்சியே தேவை இல்லை என்பது இல்லை புத்தாக்க முயற்சிகளை டெக்னாலஜிகளை தொழில்களை இண்டர்னேஷனல் வர்த்தக நிறுவனங்களை தேடித்தேடி முதலில் தமிழ் நிலத்திற்கும் தமிழ் மக்களுக்கும் கொண்டு வருவது வலது சாரிய சார்பு உடையது.

இரண்டுமே மக்கள் நலன் சார்ந்தது !

இதை முன் முடிவுகளுடன் அணுகாமல் சூழல், தேவை, பிரச்சனை, எதிர்காலம் என அனைத்தின் நிலைகளை உணர்ந்து நடுவு நிலையில் இருந்து தராசின் நடு முள் போல சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்பதே மய்யச் சித்தாந்தம், மய்யக் கொள்கை, மய்யக் கோட்பாடு, மக்கள் நீதி மய்யம் என்கின்ற கட்சியின் நிலைப்பாடு !

முடிவுகள் எடுப்பதற்கு முன், முடிவு எடுத்த பின் என்கின்ற இரண்டு நிலைகளில், செயல்பாட்டில் வேறுபாடு கொண்டது !

திரு.கமல்ஹாசனை இங்கு ஒரு விஷனரியாக (Visionary) ஒரு புதிய தத்துவத்தை அறிமுகப்படுத்துபவராக நாம் புரிந்து கொள்ளவேண்டும் !

அவர் கால வளர்வு நிலைகளை கணக்கில் கொண்டு அரசியலில் Centrism & Centrist, கோட்பாடுகளை உணர்ந்து அதை தனது கட்சியின் கொள்கையாக அறிமுகப்படுத்துகிறார் !

அரசியலில் நடுவுநிலை சாத்தியம் என்று ஊர்ஜித்தப்படுத்துகிறார்!

இதை தான் அண்ணாவும் செய்தார்.

நான் எப்போதும் சொல்வதைப் போல பெரியாரும், கலைஞரும் இடது சாரியக்கொள்கைவாதிகள்.

ஆனால் அண்ணாவும் எம்.ஜி.ஆரும் மய்யவாதிகள் ! அதிலும் அண்ணா தான் தமிழ்நாட்டு அரசியலின் முதல் மய்யவாதி !

என்ன ஒன்று கமல்ஹாசனுக்கும் அண்ணாவிற்கும் ஒரு சிறு வேறுபாடு – கமல் ஹாசன் அதை நேரடியாக “மய்யம்” என்று சொன்னார். அண்ணா சுற்றிவளைத்து “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று ONE Race ONE God என்று சொன்னார்.

கமல்ஹாசன் சொல்லும் மய்யம் என்பது மானுடக் குலம் முழுமைக்கும் அன்பும் அறிவும் கலந்த, மூளையின் இடதும் வலதும் கலந்த, இடக்கண்ணும் வலக்கண்ணும் கலந்த ஒரு உயரிய பார்வை கொண்ட ஒரு கருத்தியல் !

அரசியலில் நடுவுநிலமை என்ற ஒன்றே கிடையாது என்கின்ற முன் முடிவினை தகர்த்தெறிந்த ஒரு உன்னத அரசியல் கருத்துருவாக்கி கமல்ஹாசன் !

நன்றி : திரு.Cupid Buddha

#KamalHaasan #Centrism #Centrist #TamilNadu #Politics #Neo-Polity-Cultrist