சென்னை ஜூலை 12, 2022

தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவையை தனியார் மூலம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், முதல்கட்டமாக சென்னையில் 1,000 வழித்தடங்களிலும், மாநிலம் முழுவதும் 25 சதவீத வழித்தடங்களிலும் தனியார் மூலம் பேருந்துகளை இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.42000 கோடி நஷ்டம் ஏற்பட்டு, கடும் நிதிச்சுமையால் தவிப்பதாகவும், இதனால் இம்முடிவை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஊழலைத் தடுத்து, நிர்வாகச் சீரமைப்பு மூலம் நிதிநிலையைச் சரிசெய்ய வேண்டுமே தவிர, தனியார்வசமாக்க முயற்சிக்கக் கூடாது.

பேருந்து சேவை தனியார்வசமானால், சிறிய கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை இல்லாத நிலை உருவாகும். அதுமட்டுமின்றி, பேருந்துக் கட்டணமும் அதிகமாகும். மக்களுக்கான சலுகைகளும் பறிபோகும். எனவே, போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

மேற்கண்ட அறிக்கை மக்கள் நீதி மய்யம் மூலமாக விடுக்கப்பட்டுள்ளது.