சென்னை மார்ச் 12, 2022

டாஸ்மாக் விநியோகம் விற்பனை மற்றும் அதன் தொடர்பான பல சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் நல அமைப்புகள் ஆகியோர்கள் சார்பாக பொதுவழக்குகள் போடப்பட்டு வரும் காலங்களில் அவற்றை ஒடுக்குவது அல்லது அலட்சியப்படுத்துவதே எந்த கட்சியின் ஆட்சியாக அமையப்பெறும் அரசின் தலையாய கடைமையாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் மது அருந்துதல் மற்றும் புகைப்பது உயிருக்கு கேடு விளைவிக்கும் என்று ஸ்லைடுகள் மற்றும் விளம்பரங்கள் போடப்படுவது கட்டாயம் என்று சட்டமாக்கிய அரசு தான் அதற்கென ஓர் துறையை உருவாக்கி அதனை ஐஎஎஸ் மதிப்புகளில் உள்ள அதிகாரிகளை கொண்டு நிர்வகித்து வருவது முரண்.

கடந்த 2௦11 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சியில் அமர்ந்த பின்னர் அடுத்த 1௦ ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தொடர்ந்தது. இடையில் 2௦16 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் ஜெ தலைமையில் அமைந்த ஆட்சியில் அதே ஆண்டு அவர் மரணமடைந்தது பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர்ந்தார்.

2௦21 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது திமுகவின் அடுத்தகட்ட தலைவர்கள் தமது தேர்தல் பிரச்சாரத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றும் பேசியது கவனிக்கப்பட்டது. 1௦ வருடத்திற்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு பலரின் கனவான மதுவிலக்கு பற்றிய எந்த அறிவிப்பும் அல்லது அதை அமல்படுத்தும் வகையிலான தீர்மானம் எதையும் இதுவரை சட்டசபையில் நிறைவேற்றவில்லை.

அதற்கு மாறாக ஒவ்வொரு சிறப்பு நாட்களிலும் மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன் படி விற்பனை செய்யபடுவதாக நாம் அறிய நேர்கிறோம். இதிலும் குறிப்பாக டாஸ்மாக் கடைகளையொட்டி செயல்படும் பார்கள் பலவற்றில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றபடாமல் இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் டாஸ்மாக் கவுண்டர்களில் விற்கப்படும் மதுபான புட்டிகளுக்கு அதன் மீது நிர்ணயிக்கப்பட்ட சில்லறை விலையை விட கூடுதலாக அதனதன் அளவுக்கேற்ப ரூ.1௦ முதல் ரூ.40 வரையிலும் கூட அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

கோடிகளில் புரளும் மது விற்பனை மற்றும் பார்கள். தமிழகம் முழுவதும் 5341 கடைகள் மூலமாக விற்பனைக்கு பீர் வகைகள் சுமார் 7 நிறுவனங்களிடம் இருந்தும் இதர மதுவகைகள் சுமார் 11 நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதில் பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டு கட்சி பிரமுகர்கள் சார்ந்தவர்களால் நடத்தப்படுகிறது. அதனால் என்னவோ யாருடைய ஆட்சியிலும் எந்த வித்தியாசமும் இன்றி தங்குதடையின்றி மதுபான வகைகள் தொடர்ந்து சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை ஜகஜோராக நடைபெறுகிறது.

மது அருந்துவதால் உண்டாகும் இழப்பு பெருமளவில் வறுமைகோட்டிற்கு கீழாக மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இடையே உண்டாகிறது. இவற்றில் ஆதரவற்று போவது அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள்.

இவற்றுக்கெல்லாம் விடிவெள்ளியாக இருக்கக்கூடும் என்றே நினைத்தனர் நம் தமிழ்நாட்டு மக்கள் அதனால் ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்பதை உண்மையென நம்பினர்.

ஸ்டாலின் அவர்கள் முதல்வராக வந்தபின் எத்தனையோ இயற்கை விடியல்கள் வந்து விட்டது சாராய கடலில் மூழ்கித் தத்தளித்து இறக்கும் குடியானவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினற்கும் இன்னும் எந்த விடியலும் வந்தபாடில்லை !