எண்ணூர் : டிசம்பர் 17, 2023

சென்னையின் அருகாமையில் கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடமே எண்ணூர், இதனருகே தான் கடலின் கழிமுகத்துவாரமும் உள்ளது. இங்கே உள்ள நகரத்தில் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களுக்கான வாழ்வாதாரம் மீன்பிடித்தொழில் மட்டுமே, வருடத்தில் 365 நாட்களும் அவர்களால் மீன் பிடி தொழிலையும் செய்ய முடியாது, மீன்கள் இனப்பெருக்கம் தடைக்காலம், இயற்கை சீற்றங்கள், மழை, புயல் போன்ற காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது போகும் அந்த காலங்களில் அவர்களுக்கான அன்றாட மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு உண்டான பொருளாதார நசிவுகள் நிறையவே உண்டாகும். குழந்தைகளின் கல்வி, வயது முதிர்ந்தோர் பிணிகள் மருத்துவச் செலவுகள் என பலவும் இயற்கைப் பேரிடர் போல அவர்களின் வாழ்க்கையை அழுத்தி நிற்கும்.

எண்ணூர் பகுதியில் பல தொழிற்சாலைகள் உண்டு, அங்கே பல்வேறு சரக்குகள் கையாளும் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் என துறைமுகங்கள் இரண்டும் செயல்பட்டு வருகின்றன, இவையுடன் அரசின் கட்டுபாட்டில் இயங்கும் அனல் மின் நிலையமும் அப்பகுதியில் தான் அமைந்துள்ளது.

எண்ணூர் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள பல குடியிருப்புகள் அதில் வசிக்கும் மக்கள் முன்பிருந்தே பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தொழிற்சாலைகள் உண்டாக்கும் மாசுகள் சொல்லவே துயரம். எந்நேரமும் வெளியாகும் புகைகள் அப்பகுதியில் சூழ்ந்துள்ள கருமேகங்கள் போல் காட்சியளிக்கும். அவை எல்லாமும் பெரும் கேடுகளை விளைவிக்கக்கூடிய பல்வேறு கழிவுகள்காற்றில் கலக்கும் இதனால் சுவாசக் கோளாறுகளினால் அவதிப்படும் மக்களுக்கு தற்போது மிக்ஜாம் புயலும் வேறொரு சிக்கலைத் தந்து விட்டுச் சென்றுள்ளது. கடந்த வாரத்தில் சென்னையை உலுக்கிப் போட்ட மிக்ஜாம் புயலின் தாக்கம் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியது, மிதமான மழையை எதிர்பார்த்த சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் மீது எதிர்பார்த்ததைவிட அளவுக்கதிகமான மழையை பொழிந்து நகர்ந்தது அப்புயல்.

அப்படிப் பரவலாக பெய்த மழையினால் எண்ணூர் பகுதியும் தப்பவில்லை வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கே செயல்பட்டு வரும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சுத்திகரிப்பு தொழிற்சாலையான சென்னை பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் என வழங்கப்படும் CPCL நிறுவனத்தின் குழாய்களில் கசிவுகள் ஏற்பட்டு பல இடங்களில் எண்ணை வெளியேறி மழைநீருடன் கலந்தது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நின்றதோடல்லாமல் வீடுகளில் மழைநீருடன் உட்புகுந்தது இன்னும் வேதனை. தண்ணீரின் மேல் பகுதியை அடர்த்தியாக படியத்துவங்கிய எண்ணைக்கசிவு குடிநீரையும் கலப்படமாக்கியது மிகவும் கொடூரமான தகவல். ஆங்காங்கே திப்பி திப்பியாக படர்ந்திருந்த எண்ணை கன்னங்கரேலென்று எண்ணூர் நகரத்தில் காட்சியளித்தது காண்போரை அதிரச்செய்தது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிவரும் திரு.கமல்ஹாசன் அவர்கள், எண்ணூரில் ஏற்பட்ட எண்ணை கசிவினை சுட்டிக்காட்டி வேதனையடைந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 2017 இல் இதே போன்று எண்ணைக்கசிவு ஏற்பட்டு கடலில் படர்ந்ததால் மீன்கள் உட்பட பல உயிரினங்கள் செத்து மிதந்தது. அப்போதைய காலகட்டத்தில் கடல்நீரில் படர்ந்திருந்த எண்ணையை வாளிகளிலும் பிளாஸ்டிக் பாக்கெட்களிலும் அப்புறப்படுத்திய காட்சிகள் கண் முன்னே வந்து செல்கிறது எனவும் பேசியவர் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இப்படியே இன்னும் எத்தனை நாட்கள் வேதனையான வாழ்க்கையை நாம் பரிசாக தந்து கொண்டிருக்கப் போகிறோம் என கேள்வி எழுப்பியவர் மேலும் அடையாறு போட்க்ளப் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் எந்த இடர்பாடுகள் ஏற்பட்டாலும் விரைந்து வந்து அதைச் சீர்செய்வதும் அல்லது செய்ய வைப்பதிலும் நாம் காட்டும் முனைப்பு சென்னையின் வடக்குக் கடைக்கோடியான நகரங்களை நாம் கண்டுகொள்வதே இல்லை என்பதாக நானும் உணர்கிறேன் என்றவர் மேலும் அவர்களுக்கும் நம்மைப் போன்று இவ்வுலகில் வாழ்வதற்கான எல்லா தார்மீக உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது அதற்காக நாம் பொறுப்பான குடிமக்களாக அதற்கான ஆவணங்களை செய்திட வேண்டும் என்றும் அக்கறையுடன் குறிப்பிட்டார்.

நேற்றைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் எண்ணூர் எண்ணைக்கசிவு குறித்து தமது ஆதங்கத்தை மற்றும் கண்டனத்தை பதிவு செய்திருந்த மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள், இன்றைக்கு எவரிடமும் எந்த முன்னறிவிப்புமின்றி எண்ணூருக்கு விரைந்தார் காலையிலே அங்கே சென்று சேர்ந்தவர் அப்பகுதியில் பரவியிருந்த எண்ணைக்கசிவுகளை முழுதும் சுற்றிப் பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மக்களிடம் ஆறுதல் தெரிவித்து சமூகத்தின் பால் தாம் கொண்டிருக்கும் பற்றின் காரணமே இக்கொடுமைகளை கண்டித்துக் குரல் எழுப்ப வைக்கிறது என்றும் இங்கே வசிக்கும் நீங்கள் இப்படிப்பட்ட கொடுமைகளை தொடர்ந்து அனுபவித்து வருவது பெரும் வேதனையை அளிக்கிறது என்றும் பேசியவர் தொடர்ந்து இதற்கான நிரந்தரத்தீர்வு விரைவில் கொண்டுவர வேண்டும் அதற்கான முன்னெடுப்புகளை துவக்குவதில் இனியும் காலதாமதம் கூடாது என்றவர் தம்முடன் வந்திருந்த விகடன் இதழின் பத்திரிக்கையாளர்களும் இணைந்து கொள்ள கொசஸ்தலை ஆற்றில் மீனவர்களின் படகில் பயணம் மேற்கொண்டு நீரில் கலந்திருந்த எண்ணைக்கசிவுகளை முழுதும் பார்வையிட்டார், தண்ணீரின் அடர்த்தியை மீறி படர்ந்திருந்த எண்ணை முழுதும் பகீரென்ற உணர்வைத் தந்தன. இத்துணைக் கோரமான எண்ணைக்கசிவிற்கு சம்பந்தப்பட்ட நிறுவனமே முழுதும் பொறுப்பேற்க வேண்டும், இந்த அசம்பாவிதம் நடக்கும்போது பொறுப்பில் இருந்த தொழிற்சாலை நிறுவன அதிகாரிகள் கண்டிக்கப்பட வேண்டும், இத்தகைய கோர நிகழ்விற்கு நிறுவனத்தின் லாபவெறி மட்டுமே காரணம் மற்றும் விளிம்புநிலை மக்கள் தானே என்ற அலட்சியமும் ஒருவகையான மெத்தனப்போக்கும் தான் அவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடந்தாலும் அதற்கான தீர்வை காணாமல் அல்லது மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு உண்டான செயல்களை எடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்றவர், நான் ஒன்றும் விஞ்ஞானத்திற்கு எதிரானவன் இல்லை, அறிவியல் வளர்ச்சி நிச்சயம் தேவை தான் ஆனால் அது அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், ஒருசாரார் தேவைக்காக வேறோர் சாராரை பலிகொடுப்பதை எப்படி வளர்ச்சி என்று கருதமுடியும்.

ஆட்சியாளர்கள் சொல்லும் டிஜிட்டல் இந்தியா இதுதான், வளர்ச்சி என்ற பெயரில் காவு கொடுக்கப்பட்ட இந்தியாவும் இதுதான். ஏற்பட்ட எண்ணைக்கசிவுகளை வெறும் காகிதங்களையும் பக்கெட்டுகளையும் கொண்டு சுத்திகரிக்க எத்தனிக்கும் இதுவே புதிய டிஜிட்டல் இந்தியா என்று குறிப்பிட்டவர் இது போலவே தான் வேறோர் நிறுவனத்தின் பணம் லாபமீட்ட வேண்டும் எனும் பேராசையால் தான் கொடைக்கானல் எனும் அழகிய இடத்தை முடமாக்கி வைத்துள்ளது, இதே போன்று தான் ஓர் தொழிற்சாலை நிறுவனத்தின் லாபவெறி போபால் எனும் முழு ஊரையே ஒன்றுமில்லாமல் ஆக்கச் செய்து இன்றைக்கும் அதன் வீரியம் குறையாமல் உடல்நலமில்லாமல் பல தலைமுறைகள் உருவாகிட வழி வகுத்துவிட்டது. புறநகரின் கடைசியில் உள்ளவர்கள் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து அவர்கள் கவலை கொள்ளும் போது இவற்றைப்பற்றி எல்லாம் என்ன கவலை கொள்ளப் போகிறார்கள் என்று விட்டேத்தியாக நினைப்பதினால் தான் இது கழிவுகள் தொடர்ந்து அவர்களின் மீது கொட்டப்படுகிறது என்றாவது அந்த எளிய மக்கள் அப்படியே இருந்துவிட மாட்டார்கள் ஓர்நாள் அவர்கள் இந்த அவலங்களை எதிர்த்து நிற்கத் தொடங்கிவிட்டால் இது போன்று மக்களின் உயிர்களை மலிவாக எண்ணும் தொழில் நிறுவனங்களின் அகங்காரங்கள் எல்லாம் காணாமல் போய் விடும் என்றும் பதிவு செய்தார்.

இறுதியாக, மனித உயிர்கள் இங்கு மலினமாகக் கிடக்கின்றன. அதனால்தான் அபாயமான நிறுவனங்களை இங்கு நிறுவுகிறார்கள். இப்போதும் இந்த பொதுச் சமூகம் வாய் திறக்கவில்லை என்றால், இன்று எண்ணூர்… நாளை உங்கள் ஊராகவும் இருக்கலாம்” என்றார் காட்டமாக.

எளிய மக்களின் வலியும் வேதனையும் சொல்லி மாளாதது என்றைக்கு தான் அவர்களின் வாழ்வு விடியும் ?

https://www.vikatan.com/environment/kamal-haasans-critical-eye-on-ennore-creek-confronting-the-oil-spillage-crisis

2017 இல் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் எண்ணூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

https://timesofindia.indiatimes.com/videos/city/chennai/kamal-haasan-visits-ennore-creek-to-take-up-fishermens-issues/videoshow/61303441.cms