அக்டோபர் 12, 2024
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பெரும் விபத்திற்குள்ளானது. ஆனால் பயணிகள் யாருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டது தவிர்த்து எந்தவித அசம்பாவிதம் மற்றும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஒரு புள்ளிவிபரம் : கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல இருப்புப்பாதைகளில் சுமார் 200 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளது அதில் சிக்கி 351 மனித உயிர்கள் அகாலமாக பலியாகினர். சுமார் 970 நபர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். இதற்கெல்லாம் இதுவரை ரயில்வே இலாகா அமைச்சர் பெரிதாக எதையும் பொருட்படுத்தவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. விபத்துகள் நடைபெற்றது குறித்து அவ்வப்போது விசாரணை குழுக்கள் அமைக்கப்படுவது குறித்து தான் செய்திகள் வெளியாகிறதே தவிர்த்து எதனால் இத்தனை விபத்துகள் ஏற்பட்டது என்றோ மனித தவறுகளா அல்லது தொழில்நுட்ப கோளாறுகளா என்று தெளிவான அறிக்கைகள் இதுவரை காணப்பெறவில்லை.
ஆளும் ஒன்றிய பாஜக அரசின் ரயில்வே துறை பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்படுகிறதா என எண்ணத் தோன்றுகிறது. டிஜிட்டல் வளர்ச்சி பெருமளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று நாலாபுறங்களிலும் ஓயாமல் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் இது போன்ற ரயில் விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த விதமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கவில்லை என்றால் மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்வதையே அச்சத்துடன் தான் செய்வார்கள் என்று தெரிய வருகிறது.
நன்றி : ம.நீ.ம & சமூக ஊடக (செய்திகள்) இணையதளங்கள்