கோவை : செப்டம்பர் 28, 2024
பாப்பம்மாள் (1914 – 2024) கோவை தேவனாம்பட்டு கிராமத்தில் பிறந்தவர். இயற்கை விவசாயியாக தனது வாழ்நாளில் உடல் பலமிருக்கும் வரை வாழ்ந்து மறைந்தார். 60 வயதைத் தொட்டவுடன் அரசு பணிகளில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று தங்கள் வசதிகளுக்கேற்ப வாழ்ந்து வருவார்கள். ஆனால் பாப்பம்மாள் அவர்கள் தனது 105 வயது வரை 2.5 ஏக்கர் பரப்பளவுள்ள வயலில் இறங்கி சுறுசுறுப்பாக இயங்கியவர். சோர்வு என்றால் என்னவென்பதே தெரியாமல் ஆகிவிடும் என நினைக்கத் தோன்றுகிறது. இந்தியாவின் தெற்குப்பகுதி மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். நாட்டின் உயர்ந்த விருதுகளில் நான்காவது விருதான பத்மஸ்ரீ விருதினை கடந்த 2021 ஆண்டு ஆளும் மத்திய அரசு பாப்பம்மாள் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது.
தனது பாட்டியின் உணவகத்தை ஏற்று நடத்தியவர், உணவகத்தில் இருந்து வந்த லாபத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி அதில் இயற்கை விவசாயத்தை தொடர்ந்தார்.
இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் அவர்கள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். மய்யம் மகளிர் சாதனையாளர் விருது விழாவில் அவரைச் சந்தித்து உரையாடி உத்வேகம் பெற்ற கணங்கள் என்னுள் நிழலாடுகின்றன.
அவரது உழைப்பும், சேவையும், அர்ப்பணிப்பும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும். பாப்பம்மாள் அவர்களுக்கு என் அஞ்சலி. – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்