அக்டோபர் 01, 2024

நடிகர் திலகம் என பெருமை பொங்க அழைக்கப்பட்டவர் செவாலியே திரு.சிவாஜி கணேசன் அவர்கள். பராசக்தி எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அவர் மறையும் வரை தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கினார். ஒளிப்பதிவு செய்யும் கேமரா முன் அவர் நடிக்க வந்துவிட்டால் அவரின் ஒவ்வொரு தசையும் நரம்புகளும் கூட அபரிமிதமான நடிப்பைத் தந்துவிடும் எனும் சொல்லுக்கு உரியவர். வசனங்கள் உச்சரிப்பில் மட்டுமல்லாது பாடல்களிலும் அவரது முகபாவனைகள் பின்னணி குரலுகேற்ப அவரது வாயசைப்பும் அவ்வளவு தத்ரூபமாக அமைந்து விடும் என்பதில் துளியும் ஐயமில்லை. நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு நடிப்பு சொல்லித்தந்த குரு அவ்வை டி கே சண்முகம் அவர்கள் என்றாலும் தனது மற்றுமொரு குருவாக சிவாஜி அவர்களை வரித்துக்கொண்டார் நம்மவர். பால்ய வயதில் அவருடன் இணைந்து சில படங்கள் நடித்தாலும் இன்றைக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது தேவர் மகன். தந்தையாக நடித்தவர் சிவாஜி அவர்கள் என்பதற்கு பதிலாக இருவரும் தந்தை மகன் என காட்சிகளுடன் ஒன்றி நடித்தார்கள். அப்படமும் பெரும்புகழ் பெற்றது. அதில் வரும் ஒரு காட்சியில் தான் நல்ல விதையை நான் விதைப்பேன் நாளை நீ அல்லது உனது மகன் அப்பழத்தை உண்ணலாம் இப்படித் தான் இன்றைக்கு நாம் செய்யும் நல்ல காரியமொன்று நாளை நமது பெயர் சொல்லும் எனும் புகழ்பெற்ற வசனம் இன்று வரை பேசப்படுகிறது.

திரு.சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளிற்கு வாழ்த்து செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நம்மவர் அவர்கள்.

“காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்