டிசம்பர் 18, 2024
வரலாற்றுப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13 இல் 1908 ஆம் ஆண்டு வ.உ.சி அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட பதட்டமும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வலி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையும் அதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியை பற்றியும் விவரிக்கும்படியாக இந்த நூல் ஆராய்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எனும் ஊரில் பிறந்த ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஓர் ஆய்வறிஞர். சென்னை பல்கலைக்கழகம் வணிகவியல் இளநிலை பட்டமும், மதுரை காமராஜர் பல்கலையில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளர் மற்றும் இந்திய வரலாற்றுப் பிரிவில் விரிவுரையாளர் பணி, சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவை தவிர சமூக வரலாறு மற்றும் கலாச்சார வரலாறு போன்ற ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே எழுத்து மற்றும் அதன் படைப்பாளிகள் மீதும் அளவற்ற அன்பு கொண்ட புத்தகப் பிரியரான திரு.கமல்ஹாசன் அவர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு தமது அன்பிற்குரிய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“பெருமைக்குரிய சாகித்ய அகாடமி விருதை, தனது அல்புனைவு எழுத்துக்களுக்காக வென்றிருக்கிறார் மொழி – பண்பாட்டு ஆய்வாளர் திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி. கடும் உழைப்பைக் கோரும், விரிவும் ஆழமும் கொண்ட ஆய்வெழுத்துப் பணியில் அவரது இடையறாத பங்களிப்புக்கான அங்கீகாரமாகவும் இதைக் கொண்டாடலாம்.
ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு என் மனமார்ந்த வாழ்த்து.” – திரு.கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்