டிசம்பர் 25, 2024

கேரளாவின் மிக முக்கியமான அடையாளம் திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள். இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஓர் ஆளுமை. உலகளவில் அவருக்கான இடம் தனித்தன்மை வாய்ந்தது. எழுத்துலகில் மிகச்சிறந்த படைப்புகளை அறிமுகம் செய்தவர். எழுத்தாளர், திரைப்படங்களில் திரைக்கதையாசிரியர், பத்திரிகை துறையிலும் தடம் பதித்தவர். இப்படி பன்முகத் திறன் கொண்ட ஓர் ஒப்பற்ற மாமனிதரை நாம் இழந்துள்ளோம். ஆம் MTV அவர்கள் இயற்கை எய்துவிட்டார்.

நமது தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் மலையாள சினிமாவில் அறிமுகமானது எம்டிவி அவர்களின் படைப்பான “கன்யாகுமரி” என்ற படத்தின் மூலமே. அப்போதிருந்து அவருடன் தான் சிநேகிதம் கொண்ட ஆண்டுகளை எண்ணிப் பார்த்தால் ஐம்பதை தொட்டு நிற்பதாக நினைவு கூர்கிறார் நம்மவர். நாம் நமது இணையதளத்தில் இதற்கு முன்னர் வெளியிட்டுள்ள பல பதிவுகளில் எழுத்தாளர்களுடன் நம்மவர் தலைவர் எப்போதும் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பதை குறிப்பிட்டு எழுதியுள்ளோம். மேலும் எழுத்தாளர்களுடன் பழகிட இனம் மொழி என்று எந்த பாகுபாடும் கிடையாது. தலைவருடன் நட்பு வட்டத்திற்குள் எழுத்தாளர்கள் எப்போதும் அவருடன் அளவளாவிக் கொண்டிருப்பார்கள். தனக்கும் எழுத்துக்கும் ஓர் தொடர்பு உண்டென்றால் அது இவர்களால் தான் ஒவ்வொரு எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புத்திறன் பற்றியும், அவர்களுடன் நடந்த சுவாரசிய உரையாடல்களையும் பல இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்.

அப்படித்தான் திரு.எம்டிவி அவர்களுடனான நட்பும் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வந்ததன் காரணமாக மிக சமீபத்தில் OTT தளத்தில் வெளியான மனோரதங்கள் எனும் (வெப் சீரிஸ்) இணைய தொடருக்கு ஒவ்வொரு அத்தியாயம் துவங்குவதற்கு முன்னர் திரையில் தோன்றி அந்த சிறுகதையின் சாராம்சம் மற்றும் அதன் நடை குறித்து சுருக்கமாக விவரித்து வழங்கினார்.

அத்தகைய அழகிய நண்பரான திரு.எம்.டி.வி அவர்களின் மறைவு நம்மவர் அவர்களை மிகுந்த வருத்தமுற செய்துள்ளது. நமது நாட்டின் குறிப்பிடத்தக்க ஓர் படைப்பாளியை இழந்து நிற்கிறோம். அன்னாரது மறைவிற்கு மய்யத்தமிழர்கள் நம்மவருடன் இனைந்து மானசீகமாக அஞ்சலி செலுத்துகிறது.

நம்மவர் தலைவரின் அஞ்சலி

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.

மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது.

மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.

எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு.

தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது.

மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி. –

திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்