ஜனவரி 10, 2025

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பிற பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகளை குறித்த விதிமுறைகளை திருத்தம் செய்து புதிய வரைவை வெளியிட்டது.

புதிய வரைவில், துணைவேந்தர் நியமனம், பணியாளர் விகிதம், காலம் மற்றும் உறுதிப்படுத்தல், விடுப்பு, கற்பித்தல் நாட்கள், கல்வி ஆராய்ச்சி மற்றும் நிர்வாக கடமைகள், மூப்புரிமை மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்வி பணியாளர்களுக்கான தொழில்முறை நெறிமுறைகள் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன. முக்கியமாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள வரைவு எனக்கூறி திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காம் நாள் கூட்டத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வரைவு தொடர்பான தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்து உரையாற்றினார்.

தனித் தீர்மானம் யு ஜி சியின் திருத்தப்பட்ட வரைவுக்கு எதிர்ப்பு

தமிழக அரசின் சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றியதை மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கிறது, அது குறித்த பாராட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

துணைவேந்தர் நியமனம் சம்பந்தமான யுஜிசி அறிவிப்புக்கு எதிரான தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு பாராட்டு. மாநிலப்பட்டியலில் இருந்த கல்வித்துறையை மத்திய அரசு அபகரித்து பொதுப்பட்டியலில் சேர்த்ததை கண்டித்து, அதை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் என, நம் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில், துணைவேந்தர் நியமன அதிகாரத்தில் மாநில அரசுக்கு இருக்கும் உரிமை யுஜிசி பறிப்பது போன்ற இந்தச்செயல் மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். இதை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் இயற்றிய திமுக அரசுக்கும், ஆதரவளித்த எதிர்க்கட்சிகளுக்கும் பாராட்டுக்கள்.”மக்கள் நீதி மய்யம்