ஜனவரி’ 17, 2025

எம்.ஜி.ஆர் – இது மூன்றெழுத்து தான் ஆனால் மறைந்த பின்னரும் பல தலைமுறைகள் கடந்தும் ஓர் வரலாறாக இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். தமிழ்த்திரையுலகின் ஸ்டைல் கதாநாயகனாக, லட்சிய நடிகராக, தாயை, தந்தையை மதிக்கும் ஓர் சிறந்த மகனாக, நல்ல கணவனாக, தந்தையாக என கட்டுகோப்பாக கதாபாத்திரங்களில் வடிவமைத்து திரையில் தோன்றி வெகுஜனங்களின் மனதில் நீக்கமற நிறைந்து விட்டார். தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் திராவிட சித்தாந்தம் மூலம் கவரப்பெற்று இயக்கத்தில் இணைந்து அரசியல் கற்று பின் தனிக்கட்சி தொடங்கி மூன்று முறை நடந்த பொதுத்தேர்தல்களில் பெரும்பான்மையாக வென்று தமிழகத்தின் முதல்வராக பணியாற்றி மறைந்தார்.

திரைப்படங்களில் நடிக்கும்போது ஏழை எளியமக்களின் வாழ்வை பிரதிபலிக்கும்படியான தொழிலாளியாக, ரிக்ஸா ஓட்டுனராக நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்து விட்டார் எனலாம். அரசியலில் ஈடுபட்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் தேவையறிந்து வைத்து ஆட்சியை கைப்பற்றியதும் அவற்றை செயலாக்கி தனது பெயரை தக்கவைத்துக் கொண்டார். படங்களில் நடித்த போது உதவிடும் மனப்பான்மையை திரையில் மட்டுமே பிரதிபலித்துவிடவில்லை. அதோடு நின்றிடாமல் உதவிகள் கோரும் எளியவர்களின் வாழ்வாதாரம் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் தான தர்மங்களை செய்தது அவருக்கு பொன்மனச்செம்மல் எனும் பெயரைப் பெற்றுத் தந்தது. அவரது வள்ளல்தன்மைக்கு எடுத்துக்காட்டாக கொடுத்துச் சிவந்த கரங்கள் கொண்டவர் என்பார்கள். அவரது புகழ் இன்றளவும் இம்மியும் குறையாமல் இருப்பதற்கு அவரது ஈகை குணமும் எளிய மனமும் சாட்சி.

திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ஆறாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதில் இருந்து அப்போதைய முன்னணி நாயகர்களான எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோருடன் முக்கிய பாத்திரங்களில் இணைந்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி நடித்தது பிற்பாடு அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பின பெற்றுத் தந்தது. இவரது சுட்டித்தனமான பேச்சும் கவர்ந்திழுக்கும் திறமையும் அனைவரையும் உற்று நோக்க வைத்தது. எம்ஜிஆர் அவர்கள் படங்களில் நடித்த போதும் சரி அரசியலில் நுழைந்து அங்கும் கோலோச்சியபோதும் சரி அவருடன் நெருங்கிப்பழகும் காலங்களில் தங்களிடையே நடைபெற்ற சுவாரசியமான உரையாடல்களை பல மேடைகளில் பேசியுள்ளார் நம்மவர்.

திரு.எம்.ஜி. ராமச்சந்திரன் எனும் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரது நினைவைக் கொண்டாடும் லட்சோப லட்ச இதயங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.” திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/ikamalhaasan/status/1880085651749777499
https://twitter.com/ikamalhaasan/status/1880085651749777499
https://twitter.com/PTTVOnlineNews/status/1880095195318137159

https://twitter.com/MalaimurasuTv/status/1880096550313177494

https://twitter.com/MaiamOfficialIT/status/1880176052934504493

https://twitter.com/Maiatamizhargal/status/1880309314407264677

நன்றி : மக்கள் நீதி மய்யம் & சமூக ஊடக செய்திகள்