நெசவுத் தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி 140% உயர்வு…
மறுபரிசீலனை செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை !
நம் நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயமும் கைத்தறி நெசவுத்தொழிலும்தான். விவசாயிகளின் கடும் எதிர்ப்பு, ஓராண்டு தொடர் போராட்டத்தின் விளைவாக, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சூழல் உருவாகியுள்ளது. விவசாயிகள் போராட்டமே இன்னும் முழுமையாக முடிவடையாத சூழலில், நெசவாளர்களின் வாழ்க்கையை சிக்கலுக்குள்ளாகும் நடவடிக்கையை ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளதை, மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது.
2017ம் ஆண்டு அமலுக்கு வந்த GST வரியில் நெசவுத்தொழிலுக்கு 5 சதவீதம் GST வரி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது மீண்டும் `GST விகிதாச்சாரம் மாற்றம்’ (Change in GST Rate) என்னும் முறையில் வரும் ஜனவரி மாதம் முதல் 12 சதவீதமாக உயர்த்த முடிவுசெய்து, ஒன்றிய அரசால் அரசாணை (எண்:CG-DC-E-18112021-231253) வெளியிடப்பட்டுள்ளது. இது 140% வரி உயர்வாகும்.
2017ம் ஆண்டு 5 சதவீதமாக அறிவிக்கப்பட்ட GST வரியின் காரணமாக, நெசவுத் தொழிலைத் தொடர முடியாமல் சிறு மற்றும் குறு நெசவாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேறு பணிகளுக்குச் சென்றுவிட்டனர். இப்போது மீண்டும் GST வரியை உயர்த்தி நெசவுத்தொழிலை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் ஒன்றிய அரசின் முடிவு, எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
கொரோனா, மழை வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால் நெசவுத்தொழிலானது ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் GST வரி உயர்வானது இன்னும் கடுமையான பாதிப்பை உருவாக்கும். இதனை கருத்தில்கொண்டு, 18 நவம்பர் 2021 அன்று ஒன்றிய அரசு வெளியிட்ட GST வரி உயர்வு அரசாணையை மறுபரிசீலனை செய்து, வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து மாநில அரசானது முறையீடுகள் செய்து வரி உயர்வைத் திரும்பப்பெறவைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
SKP.B.கோபிநாத்,
மண்டலச் செயலாளர், (காஞ்சி)
மக்கள் நீதி மய்யம்.