தர்மபுரி ஜனவரி 21, 2022

2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி செய்த காலகட்டத்தில் அரசு நிதியில் முறைகேடு செய்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக உயர்கல்வி துறையினை நிர்வகித்து வந்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான, (கடந்த 2021 தேர்தலின் போது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆக தேர்வு பெற்று 5 ஆவது முறையாக எம்.எல்.எ வாக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்) குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) போலீசார் நேற்று சோதனை செய்தனர்.

இச்சோதனையானது அன்பழகனின் வீடு உட்பட அவருக்கு தொடர்பு உள்ளதாக கருதப்படும் சுமார் 58 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது, 20.01.2022 காலையில் தொடங்கிய இந்தச் சோதனை இரவு 8 மணி வரை தொடர்ந்து நீடித்தது. இந்தச் சோதனை குறித்து தகவல் அறிந்ததும் அவருடைய வீட்டின் முன்பாக கட்சியினரும் அவரது ஆதரவாளர்களும் திரண்டு நின்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே தகவலறிந்து அவ்விடத்திற்கு அடுத்தடுத்து வந்து சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் முல்லைவேந்தன், செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அங்கே செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களிடம் “இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போது நடைபெறும் வழக்கமான மற்றும் காழ்ப்புணர்ச்சியின் காரணமே என்றும் கே.பி.அன்பழகன் பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து 5 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் எனவும் தற்போது திமுக ஆட்சியை கைப்பற்றியபோதும் தருமபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக சார்பாக வேட்பாளாராக போட்டியிட்டவர்களை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறச் செய்துள்ளார்” என்றும் கூறினர்.

மேலும் அவர்கள் தொடர்ந்து கூறியதாவது “அன்பழகன், அதிமுக-வை தருமபுரி மாவட்டத்தில் பெரும்பான்மையுடன் மற்றும் கட்டுக்கோப்பாகவும் வலிமையாகவும் வைத்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்போதைய திமுக அரசு இப்படிப்பட்ட முகாந்திரம் இல்லாத குற்றச்சாட்டினை சுமத்தி இது போன்ற சோதனைகள் செய்து வருவதாக கூறியவர்கள் அன்பழகன் அவர்கள் இந்த நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொண்டு தன் மீது சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டினை உண்மையற்றவை என நிரூபணம் செய்வார்” என்றும் கூறினர்.

லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனையானது அன்பழகன் அவர் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் அரசு நிதியை முறைகேடாக உபயோகம் செய்து சட்டத்திற்கு புறம்பாக ஈடுபட்டு தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சொல்லப்பட்ட வழக்கின் இந்த சோதனை நேரத்தில் கணக்கில் வராத 2.88 கோடி ரொக்கமாக மற்றும் 6.637 கிலோ எடை அளவிலான தங்க ஆபரணங்கள் 13.85 கிலோ வெள்ளி ஆகியவைகளை கைப்பற்றி உள்ளதாக அறிவித்த போலீசார் இதில் ரூபாய்  2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து 650 ரொக்கப் பணத்திற்கு முறையான கணக்கு இல்லை எனவும் தெரிவித்தனர் இதில் அன்பழகன் அவரது மனைவி மல்லிகா மகன்கள் சசிமோகன் சந்திரமோகன் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் மேலும் இதில் அவருக்கு தொடர்புடையாதாக கருதப்படும் அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது எனவும் தெரிவித்தனர்.

Courtesy: The Hindu Tamil