தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விளைந்த நெல்லையும், வாடிய விவசாயிகளையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – ம.நீ.ம

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் கொள்ளைகளால் உழவர் பெருமக்கள் அடையும் இன்னல்கள் ஒருபக்கமிருக்க, அறுவடை காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காமல் இருப்பது அரசால் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பயனும் உறவுகளுக்கு கிடைக்க வழியற்றுப் போகிறது.

திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மேட்டூர் அணையின் நீரை நம்பி பாசனம் செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக, பல லட்சம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. எஞ்சிய விளைச்சலை அறுவடைக் காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில், நிலையங்களுக்கு வெளியே வேதனையோடு கொட்டி வைத்துள்ளனர். நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்க ஆரம்பித்துள்ளது இதனால் கடுமையாக உழைத்த விவசாயிகளுக்கு எந்த பயனுமில்லை; தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

முப்போகம் ஒரு போகம் ஆகிவிட்டது. ஒரு போக சாகுபடிக்கு விவசாயிகள் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. சம்பா அறுவடை தொடங்கும் டிசம்பர் மாதத்திலேயே நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், நேரடி கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்காமல் இருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை தனியார் விற்பனையாளர்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளின் இன்னல்களை அரசு உணர வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வரும் உழவர்கள், தங்களின் நிலங்களுக்குரிய அசல் சிட்டா அடங்கல் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து வாங்கி வர வேண்டும் என்பன போன்ற நடைமுறைகள் சாத்தியமற்ற, ஏற்றுக்கொள்ளவே முடியாதவையாக இருக்கிறது. விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவாய் துறைகளில் உள்ள விவசாயிகளின் நிலம் தொடர்பான தரவுகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உடன் இணைக்கப்பட்டால், விவசாயிகள் அசல் சிட்டா பெற காத்துக் கிடப்பதும் அதற்கு ஒவ்வொரு முறையும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலையும் தடுக்கப்படும். 40 கிலோ நெல் மூட்டை ஒன்றுக்கு 30ரூ முதல் 50ரூ வரை லஞ்சம் கொடுத்தால் தான் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியும் என்ற ஊழலை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே முந்தைய ஆண்டுகளில் நடைமுறையில் இருந்தது போலவே அனைத்து மாவட்டங்களிலும் எல்லா நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்கவும் தேவைப்பட்டால் கூடுதலாக புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு சுமையாக விளங்கும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு நீக்க வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் திரு. சிவ.இளங்கோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.