புதிதாய் துவக்கப்படும் ஓர் கட்சி தன்னை மக்களிடையே நிலைநிறுத்திக்கொள்ள சில காலங்கள் தேவைப்படும். தலைமையின் அணுகுமுறை, கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் என பல கட்டங்களாக பகுக்கப்பட்டு வெகு உன்னிப்பாக கவனிக்கப்பட்ட பிறகே அக்கட்சியை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

அப்படி 2018 இல் துவக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டு தனது வெற்றிவாய்ப்பை இழந்தாலும் இன்னும் கொஞ்சம் காலம் தான் காணமல் போய்விடும் கட்சிகளில் ஒன்றாய் மாறிப்போகும் என்று ஆருடம் சொன்னவர்கள் புருவம் உயர்த்தி ஆச்சரியம் கொள்ளும்படி நான்கு ஆண்டுகளை இன்னும் சில தினங்களில் நிறைவு செய்து 5 ஆம் ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கவிருக்கிறது.

மக்களிடையே பிடித்துப்போன கட்சியாக உருவெடுத்து வரும் மய்யம் தனது கொள்கைகள் கோட்பாடுகள் ரீதியாக வெகு சராசரி அரசியல் தள்ளி வைத்து இங்கிருக்கும் பெரிய கட்சிகள் எதுவும் முன்னெடுக்காத சிறப்புகளை தன்னுள் கொண்டிருக்கும் கட்சியாக திகழும் மய்யத்தை எனக்கு ஏன் பிடித்தது என்று வழியெங்கும் போகுமிடங்களை வளமாக்கி அள்ளிப்பருக தூண்டும் நீரோடை போல தெள்ளதெளிவாக தனது கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார் இளம் எழுத்தாளர் மற்றும் சாகித்ய அகதமியின் யுவபுரஸ்கார் விருது வென்ற திரு சுனில் கிருஷ்ணன்.

உங்களைபோன்ற இளம் படைப்பாளிகள் இந்த தேசத்தின் பெருமையை எடுத்துச்செல்லும் சான்றோர்கள் உங்கள் பார்வையில் மக்கள் நீதி மய்யம், நன்றியும் அன்பும் !

Source: http://suneelwrites.blogspot.com/2021/03/blog-post.html?m=1

இந்த தேர்தலில் ஆட்சியமைக்க சாத்தியமில்லை என்றாலும் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். அடையாள அரசியல் முதன்மை பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் அது உருவாக்கும் துருவப்படுத்துதலை சமன் செய்ய உள்ளடக்கும் (inclusive) அரசியலை முன்வைக்கும் இயக்கங்கள் வளரவேண்டும்.

துருவப்படுத்துதலை சமன் செய்ய உள்ளடக்கும் (inclusive) அரசியலை முன்வைக்கும் இயக்கங்கள் வளரவேண்டும்

திரு சுனில் கிருஷ்ணன்

கொள்கை அரசியல் ஒரு வழி என்றால் செயலூக்கமிக்க களச்செயல்பாடு வழியாக அரசியல் அமைப்பாக திரள்வது மற்றுமொரு வழி. கொள்கை அரசியல் என்பது  வழிகாட்டுதல் நெறி என்ற அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதி கட்சி, திராவிட கட்சி, தலித் இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள், பாஜக மற்றும் இந்துத்துவ இயக்கங்கள், இஸ்லாமிய கட்சிகள், நாம் தமிழர் என இவையாவும் கொள்கை அரசியலின் உதாரணங்கள். கொள்கை அரசியல் என்பது அடையாள அரசியலுக்கான தேவையிலிருந்து உருவாவவது. ஆகவே அவை உயிர்த்திருக்க அந்நியர்களை அல்லது பொது எதிரிகளை கட்டமைத்தபடி இருக்க வேண்டியுள்ளது. 

தேசிய அளவில் செயல்வழி இயக்கமாக திரண்ட முதல் இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ், பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பங்களிப்பில் உருவான ஜனதா கட்சி போன்றவற்றை சுட்டலாம். சமீபத்திய உதாரணம் ஆம் ஆத்மி கட்சி. தமிழகத்தில் எம்.‌எஸ் உதயமூர்த்தி போன்றோர் இப்பாதையில் பயணித்திருந்தாலும் பெரும் தாக்கத்தை செலுத்த முடியவில்லை. மக்கள் நீதி மய்யத்தை நான் இந்த வரிசையிலேயே வைப்பேன். அறப்போர் இயக்கம், சகாயம் ஐ ஏ எஸின் இயக்கத்தை கூட இதனுடன் சேர்த்தே காண முடியும். இந்த வரிசையில் உள்ள கட்சிகளுக்கும் மேற்சொன்ன பட்டியலில் உள்ள கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடை எளிதில் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

கமலிடம் கொள்கை என்ன என திரும்ப திரும்ப கேட்பவர்கள் சூசகமாக கேட்பது உங்கள் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டு அரசியல் செய்யுங்கள் என்பதையே. அனைவரையும் உள்ளடக்கிய எதிரியற்ற அரசியல் ஒரு சாத்தியமாகக்கூட நமக்கு தோன்றவில்லை. 

அனைவரையும் உள்ளடக்கிய எதிரியற்ற அரசியல் ஒரு சாத்தியமாகக்கூட நமக்கு தோன்றவில்லை. 

திரு சுனில் கிருஷ்ணன்


செயல்வழி அரசியலுக்கு சில எல்லைகள் உண்டு. நடைமுறையில் உள்ள வழிமுறைகளின் மீது இருக்கும் அதிருப்தியே அதை இயக்கும் ஆற்றல். பெரும்பாலும் அதிருப்திக்கான காரணத்தை விசையுடன் முட்டி மோதிய பிறகு விசையழிந்து மற்றுமொரு அரசியல் இயக்கமாக நீடிக்கும். ரஜினி இந்த அதிருப்தி விசையை உசுப்ப முயன்றார். அவருடைய தாரக மந்திரம் ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்’ என்பதாக இருந்தது. தமிழருவி மணியன் போன்ற செயலூக்க அரசியல் தலைவர்களை உடன் இருத்திக்கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அதிருப்தி ஆற்றல் விசைகொள்ளவில்லை. ஆகவே அவருக்கும் வேறு வழியில்லை. அவரையும் கொள்கை கோடாலியை வைத்து பெயர்த்து பார்த்தார்கள்.‌

உண்மையில் கொள்கைகள் அதிகாரத்தில் இருக்கும் போது சமரசத்திற்குட்பட்டதாகவும் அதிகாரமற்ற போது வீரியமானதாகவும் இருநிலைகொண்டதாகவே உள்ளது. கொள்கைகள் என்பதல்ல நிலைப்பாடுகளே இருக்க முடியும் எனும் புரிதலையே நான் கொண்டுள்ளேன். நிலைப்பாடுகள் காலத்தாலும் சூழலாலும் கட்டுப்படுத்தப்படுபவை. மாற்றத்துக்குட்பட்டவை.‌ நிலைப்பாடுகள் எவ்வகையிலும் இழிவானவை அல்ல. நல்ல ஆளுகை அளிப்பதாக சொல்லும் கட்சியை நான் நிச்சயம் பரிசீலிப்பேன்.

கொள்கைகள் என்பதல்ல நிலைப்பாடுகளே இருக்க முடியும். நிலைப்பாடுகள் காலத்தாலும் சூழலாலும் கட்டுப்படுத்தப்படுபவை. மாற்றத்துக்குட்பட்டவை.‌ நிலைப்பாடுகள் எவ்வகையிலும் இழிவானவை அல்ல.

திரு சுனில் கிருஷ்ணன்

நடைமுறையில் ஊழலற்ற ஆட்சி சாத்தியமில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அதை மீற நம் கூட்டு முயற்சி தேவை. அரசு மாற்றத்தால் அது மாறுமா என சொல்வதற்கில்லை. எனினும் அத்திசையை நோக்கி பயணிக்கவாவது வேண்டும். நாம் அரசியலை துருவங்களாக உருவகித்து கொள்கிறோம். யார் வரக்கூடாது எனும் தேர்வு மட்டுமே நம்மை இயக்குவதாக உள்ளது. அதுவே ஒரு கட்சியை பி டீம் என சொல்ல வைக்கிறது. இதன் பின் உள்ள மனநிலை நீங்கள் எங்களுடன் உள்ளீர்கள் அல்லது எங்களுக்கு எதிராக உள்ளீர்கள் என்பதே. இந்த மனநிலையே பாசிசத்தின் ஊற்று. 

நீங்கள் எங்களுடன் உள்ளீர்கள் அல்லது எங்களுக்கு எதிராக உள்ளீர்கள் என்ற மனநிலையே பாசிசத்தின் ஊற்று. 

திரு சுனில் கிருஷ்ணன்


அதிருப்தியினால் ஏற்படும் செயலூக்கம் விசையழியும். இதை கடக்க நேர்மறை கனவு வேண்டும். காந்தி சவுரி சவுராவிற்கு பிறகு ஆக்கப்பூர்வ செயல்திட்டத்திற்கு தான் திரும்புகிறார். அதற்கே அதிக ஆற்றலை செலவு செய்கிறார். காந்தி இந்த அதிருப்தியின் ஆற்றல் சிதறுவதை அவர் காலத்தில் முன் உணர்ந்த ஒரே தலைவர். ஆகவே செயலூக்கத்தை இயக்கும் அதிருப்தியை வெளியேற்றி நேர்மறை இயல்புகள் கொண்ட ஒரு இயக்கத்தை நடத்த முயல்கிறார். கீதையை இந்த தளத்திலேயே அவர் பயன்படுத்துகிறார்.

கொள்கை அரசியல் இந்த தளத்தில் வலுவானது. அதன் கருத்தியல் எதிரி நன்கு வரையறை செய்யப்பட்டதால் அதுவே அவர்களை இயக்கும் விசையாகி சிதறாமல் காக்கிறது.

கமல் ‘சீரமைப்போம் தமிழகத்தை‘ என சொல்லும்போது அதில் ஒரு நேர்மறை கனவு உள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் களத்தில் இந்த நேர்மறை செயலூக்கத்துடன் செயல்படுவாரா என்பதே அவருக்கு முன் இருக்கும் சவால். செயலூக்க அரசியல் தனக்கான தவைவர்களை திரளில் இருந்து உருவாக்கிகொள்ளும். காந்தி, ஜெ.பி, கெஜ்ரிவால் போன்றோர் தவைவர்களாக உருவானபோது அவர்களுக்கு பின் பெரும் வரலாறு ஏதுமில்லை. கமலுக்கு உள்ள மற்றொரு சவால் அவர் ஏற்கனவே தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பிம்பம். பிம்பங்கள் குறித்து கூட்டு நனவிலியில் சில பொது கற்பிதங்கள் படிந்திருக்கும். அதை குலைக்கும் செயலை அத்தனை எளிதில் அனுமதிக்காது.

கமல் மக்கள் நீதி மய்யத்தின் ஒரு முகமாக இருந்தாலும் அதன் ஆற்றல் என்பது, தங்கள் தங்கள் பகுதிகளில் செயல் முனைப்போடு களத்தில்  ஈடுபடுபவர்கள்  தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கான தங்கள் முகமையாக மக்கள் நீதி மய்யத்தை காண்பதுதான்‌. அத்தகையவர்களுடன் கமல் தானும் ஒரு முகமாக இருக்கும்போது இதில் ஓரு சமநிலையை அடைய முடியும்.

எங்கள் தொகுதியில் மநீம சார்பாக நிற்கும் ராசக்குமார் பல ஆண்டுகளாக களப்பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்தவர். ஆலந்தூஅ சரத் பாபு மற்றொரு உதாரணம்.

மக்கள் நீதி மய்யம் செயல்வழி அரசியலின் பாதையை தேர்வதற்கான தொடக்க அறிகுறிகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

மக்கள் நீதி மய்யம் செயல்வழி அரசியலின் பாதையை தேர்வதற்கான தொடக்க அறிகுறிகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன

அத்திசையில் தனது பயணத்தை தொடரும் பட்சத்தில் பல புதியவர்களை அரசியலுக்கு கொணரும், புதிய முன்மாதிரியை தமிழகத்தில் ஏற்படுத்தும். எப்போதும் புதிய திரளை அரசியல்படுத்தும் பணியை செயல்வழி அரசியல் இயக்கங்களே வரலாற்றில் நிகழ்த்தியுள்ளன.

மக்கள்  நீதி மய்யம் வளர்வது நீண்ட கால அளவில் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் வளர வழிவகுக்கும். 

Source: http://suneelwrites.blogspot.com/2021/03/blog-post.html?m=1