எங்கள் முக்கிய கொள்கை என்றால் சமத்துவம், சமூக நீதி என்று மார் தட்டி முழக்கும் திமுக தன் கையில் சல்லடையை வைத்துக் கொண்டு ஊருக்கெல்லாம் சமூக நீதி போற்றும் கட்சி என தண்ணீர் பிடித்துத் தருகிறேன் என தர்க்கம் பேசி வருவது ஓட்டரசியல் நாடகம்.

திமுக மிகப் பழமையான கட்சி அடக்குமுறைகள் ஒடுக்கப்பட்டவர்கள் வீறு கொண்டு எழுந்து நின்று தங்கள் உரிமைகளை வென்றெடுக்க அவர்களும் சரிக்கு சமமாக ஆட்சி அதிகாரம் பெற்று நிமிர்ந்து நிற்க வழிவகை செய்யும் நாங்கள் மட்டுமே தமிழினத்தின் தன்மானம் காக்கும் கட்சி என்றும் வீதிக்கு வீதி மேடைகள் தோறும் முழங்கும் இவர்கள் தங்கள் கட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இன சமூகத்தை (இங்கே மக்கள் நீதி மய்யம் அப்படி சாதி மதம் இனம் எனும் அடிப்படையில் பிரித்தாளுவது தவறு எனும் கருத்தை கொண்டது மேலும் அப்படி ஒதுக்கி வைப்பது கண்டிக்க வேண்டிய செயல் என்பதில் உறுதியாக நிற்கிறது) அவர்களுக்கு தர வேண்டிய உரிமையை, எங்கும் எப்போதும் மறுக்க கூடாது எனும் தார்மீகம் மீறும் திமுக வின் அடாவடி செயல் அவர்களின் உண்மையான மனநிலையை உணர்த்துகிறது.

வெறும் கண் துடைப்பு தான் இவர்களின் சமூக நீதி முழக்கம் என்பது.

வேலூர் மாவட்டம் மேல் மனுவூர் எனும் கிராமத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வீடு கட்டித்தர கடந்த 2021 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழக அரசின் சிறுபான்மை மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு துறை அமைச்சர் திரு மஸ்தான் அவர்கள்
முகாம்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் குறை கேட்பு சிறப்பு முகாம்களை நடத்தினார்.

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கொண்டாசமுத்திரம் எனும் கிராமத்தில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில் நடைபெற்ற சிறப்பு முகாமில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் குடியாத்தம் தனி தொகுதி எம் எல் ஏ திருமதி அம்முலு விஜயன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழச்சியில் அதன் தொடக்கமாக அனைவரையும் வரவேற்று பேசிய அம்முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கே அமைச்சர் உட்பட வந்திருந்த பலரின் பெயர்களை அடுத்தடுத்து வாசித்து வந்தார் அதில் தனது பெயர் இல்லாதது கண்டு ஆதங்கம் அடைந்த அம்முலு விஜயன் அப்பெண்ணிடம் இங்கிருக்கும் எல்லோருடைய பெயரையும் வரிசையாக சொல்லிய நீங்கள் என் பெயரை சொல்லவில்லையே ஏன் என்று கேட்க அப்பெண் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எனக்கு எழுதித் தந்த பட்டியல் கொண்டு தான் நான் இதுவரை வாசித்தேன், மற்றபடி உங்கள் பெயரை உச்சரிக்க நான் தயங்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இதை தொடர்ந்து பேசிய அம்முலு விஜயன் அவர்கள் தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தாலும் நான் தலித் என்பதால் புறக்கணிக்கப்படுகிறேன் என்றும் எப்போதும் நான் அகதியாக உணர்கிறேன். கட்சியில் மற்றும் அரசு சார்பில் நடைபெறும் விழாக்கள் என எங்கும் எனது பெயரை உச்சரிக்காமல் இருப்பதும் எனக்கான உரிமையை தவிர்க்கும் போக்கு மற்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட செயல் என்னை அகதியாக உணர வைக்கிறது என்று தமது வேதனையை தெரிவித்தார்.

தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை கோட்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக சொல்லும் திமுக வின் இரட்டை நிலை கடைபிடிக்கும் செயல் அப்பட்டமாக தெரிகிறது.

ஊருக்கு உபதேசம் செய்யும் திமுக என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

https://tamil.asianetnews.com/politics/this-is-the-social-justice-of-the-dmk-is-this-the-slogan-that-you-have-abolished-caste-the-trial-is-stalin–qi2wcs