நமது ஊரில் பொதுவாகவே ஒன்றிரண்டு சொற்றொடர் பேச்சு வழக்கில் இருக்கும், அது ஒரு நல்ல நாளு பொல்ல நாளு எனவும் நாளும் கிழமையுமா இப்படிச் செய்யலாமா ? என்பதாய் இருக்கும்.

அந்த நல்ல நாள் அன்னைக்கு எண்ணெய் வெச்சு தேச்சிக் குளிச்சு நல்ல துணி போட்டுகிட்டு நாலு சொந்தக்காரர் வீட்டுக்கு போய்ட்டு வர அன்னைக்கு முழுசும் அவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும்.

ஆனா கொஞ்ச காலமா இப்படி நல்லது சொல்ல முடியாது.

உச்சத்தை தொடும் டாஸ்மாக் வியாபாரம் சாதனையாக சொல்ல முடியாது. இதுவரை ஆண்டு முடித்த ஆட்சி செய்த கழகங்கள் மதுபானத்தை ஒழிப்போம் என்று சொன்னவையெல்லாம் காற்றில் கரைந்த சொற்களே. அதற்கான எந்த முயற்சியை எடுக்கவுமில்லை மதுவிலக்கு எனும் உயிர்பறிக்கும் விஷக்கல்லை இம்மியும் நகர்த்தவில்லை.

தமிழகத்தில் மது விற்பனை மற்றும் மதுவிலக்கு பற்றிய வரலாறு சற்று பெரிது, மேலும் அதில் பல வளைவு நெளிவு சுளிவுகள் உள்ளன அதைப்பற்றிய ஓர் தனிக்கட்டுரை விரைவில் நம் இணையத்தளத்தில் வெளியாகும்.

சரி நாம முதல் வரிகளில் சொன்னதுக்கு வருவோம். புதுவருடம், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் திறக்கப்படும் டாஸ்மாக் வியாபாரம் கண ஜோராய் நடக்கும் கோடிகளில் கல்லா கட்டும் அரசு மதுபானக்கடைகள். அப்படி வரப்போகும் பண்டிகை நாட்களுக்கு முன்னதாக நாளிதழ்களில் சில செய்தி வெளியாகும் அதில் மதுபானங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் கொடுமைகள் கூட உண்டு.

மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் கடைகள் திறக்கப்படும் நேரத்திற்குள்ளாக டாஸ்மாக் கடை வாசலில் குழுமி விடுவார்கள், மற்ற நாட்களில் சிறிதளவு தொகைகளை செலவு செய்யும் அவர்கள் விசேட நாட்களில் மதுவை அருந்தும் செலவு மூன்று நான்கு மடங்குகள் அதிகமாகும்.

இதில் வேதனை என்னவென்றால் இது தான் தகுந்த நேரம் என்பதாய் பெரும்பாலான மதுக்கடைகளில் பணிபுரியும் பல ஊழியர்கள் அசலான விலையில் விற்பனை செய்ய வேண்டியதில் இருந்து சுமார் 10 ரூ முதல் 50 ரூ வரை கூடுதலாக விற்று கணக்கில் வராமல் தனிப்பட்ட முறையில் விற்று தங்கள் பாக்கெட்களில் நிரப்பிக் கொள்வதும் உண்டு.

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதையும் கள் இறக்கி விற்பனை செய்வதையும் தடுப்பதாக கூறிக்கொண்டு மக்களின் உயிரை அவர்களின் குடும்பத்தினரின் குடியைக் கெடுக்கும் அரசு வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக தம்பட்டம் அடித்துக் கொள்வதில் எந்த நியாமும் இல்லை. இதில் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் உயர்ந்து கொண்டே போவது உற்பத்தி செய்து வரும் மதுபான ஆலைகளின் பணம் கொழுத்த முதலாளிகள் தான்.

இது ஒருபுறமிருக்க மதுவின் தீமைகளை விளக்கி குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க அதற்கு ஒரு தனித்துறையை மதுவிலக்குதுறை என்பதையும் நிர்வகித்து வரும் தமிழக அரசு அதற்காக மாவட்டம் தோறும் செலவிடப்படும் தொகை சுமார் 8.28 இலட்சங்கள் என புள்ளிவிவரம் சொல்வது இன்னும் பெரிய வேதனையுடன் கூடிய நகைப்புக்குரிய விஷயம். அப்படி என்ன மாதிரியான பிரச்சாரங்களை செய்கிறது

எந்த ஒரு கட்சியின் அரசாக இருந்தாலும் படி என்று தான் சொல்லவேண்டும் குடி என்று சொல்வது எங்கனம் நீதியாகும்.

தகவல் : விக்கிபீடியா