2019 இல் சாலையில் நடப்பட்டு இருந்த பேனர் காற்றில் திடீரென சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்  (மென்பொறியாளர்) ட்ரக் ஒன்றில் சிக்கி அதே இடத்தில் பலியானார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு ஸ்டாலின் அவர்கள் இதைக் கண்டித்து எங்கள் திமுக சார்பில் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி இது போன்ற பேனர்கள் கட் அவுட்டுகள் வைக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார்.

அதெல்லாம் அவ்வப்போது வேணும் என்கிறபோது சட்டத்தை ஈயக்கம்பியாக வளைத்துக் கொள்வது அரசியல்வாதிகளின் வசதி. மேம்போக்காக தம் கட்சிக்காரரை கண்டிப்பார்கள் ஆனால் சாலைகளில் நடுவிலும் இருபுறங்களிலும் அந்த பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகள் நடப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.

அதே போன்று சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் சென்ற வருடம் (2021) ஆகஸ்டு மாதத்தில் அமைச்சர் திரு பொன்முடி அவர்கள் விழுப்புரம் நிகழ்சிக்கு வருகை தந்தபோது அப்பகுதியை சேர்ந்த திமுக வினர் அவரை வரவேற்று கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி துடிதுடிக்க இறந்து போனது இன்னும் அவ்வளவு விரைவில் மறக்க முடியாது.

இப்படி இவர்களின் விளம்பர வெறியும் பதவி பெற அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொள்ளும் பேனர் கட் அவுட்டு கலாச்சாரமும் மீண்டும் மீண்டும் தலை தூக்கி வருகிறது.

சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கென அதை நடத்தியவர்கள் சார்பில்  பிரம்மாண்ட எல்.ஈ.டி (LED) ஒளிரும் (பார்க்க பத்திரிகை செய்தியுடன் உள்ள படம்) அமைக்கப்பட்டு இருந்தது அது மட்டுமில்லாது வழியெங்கும் அக்கட்சியினர் பலரும் தத்தமது இருப்பைக் காட்டிக்கொள்ள பல பேனர்களை வைத்திருந்தார்கள்.

இதைப்பற்றி ஆவடி சரக காவல் துறை ஆணையரிடம் தகவல் சேர்ந்ததும் கடந்த வெள்ளியன்று (21.02.2022) அனைத்து பேனர்களும் கட் அவுட்டுகளும் அகற்றப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதன் தொடர்பாக புகைப்படங்களை ஆவடி தொகுதியின்  சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி ச.மு நாசர் அவர்களின் கவனத்திற்கு பிரபல நாளிதழ் கொண்டு செல்ல அதைப்பற்றி தனக்கு தெரியவில்லை என்றும் அதை யார் நிறுவியது என்றும் தான் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாக பிறப்பிக்கப்பட்டது என்னவெனில் முறையான அனுமதியின்றி சாலைகளில்/பொதுவெளியில் மக்களுக்கு இடையூறு அல்லது உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் வகையில் கட் அவுட்டுகள் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் அனுமதி பெறவேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது

இப்படி வைக்கப்படும் பேனர்கள் அகற்றுவதில் அறப்போர் இயக்கம் சட்டரீதியாக தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது

கட்சியினரே நீங்கள் உங்களின் இருப்பை பதவியை தக்கவைத்துக்கொள்ள நீங்கள் பிரம்மாண்ட அளவுகளில் பேனர்கள் கட் அவுட்டுகள் வைத்து அதிக சப்தத்துடன் ஜால்ராக்கள் அடித்துக் கொள்வது தவறில்லை ஆனால் அதன் மூலம் உண்டாகும் சிரமங்கள் உயிர்பலிகள் உண்டானால் அது மன்னிக்க முடியாத தண்டனைக்குரிய பெருங்குற்றம். மேலும் உங்கள் பேனர்களை மேலிடத்தில் ரசிக்கிறார்கள் என்றால் அதைவிட கொடுமை வேறில்லை.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/boy-electrocuted-while-erecting-dmk-flagpole/article36050786.ece https://www.ndtv.com/tamil/woman-tries-to-avoid-aiadmk-flagpole-on-road-hit-by-truck-in-tamil-nadus-coimbatore-2131044?amp=1&akamai-rum=off